திருவண்ணாமலை:பத்திரிகையாளர்கள் நல வாரிய உறுப்பினர்கள் அட்டை வழங்கும் விழா நேற்று (ஜூன் 9) திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மு.பெ.கிரி மற்றும் பே.சு.தி.சரவணன் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் திருவண்ணாமலை மாவட்ட பத்திரிகையாளர் நல வாரிய உறுப்பினர் அட்டை வழங்கி பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு உரையாற்றினார். அப்போது பேசிய அமைச்சர் எ.வ.வேலு, “தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தலின்போது திமுக ஆட்சி அமைந்த உடன் பத்திரிகையாளர்களுக்கு நல வாரியம் அமைப்பேன் என்று கூறியதன் அடிப்படையில் திமுக ஆட்சி அமைந்த உடன் முதலமைச்சர் ஸ்டாலின் பத்திரிகையாளர்களுக்கு நல வாரியத்தை அமைத்தார்.
இந்த ஆட்சியின் நோக்கமே திராவிட மாடல் ஆட்சி, அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையாகத்தான் தற்போதைய திமுக அரசு அமைந்துள்ளது. மேலும் பத்திரிகையையும், திராவிடத்தையும் பிரித்துப் பார்க்க முடியாது. சமுதாயத்தில் அரசையும், பத்திரிகையாளர்களையும் ஒருபோதும் பிரித்துப் பார்க்க முடியாது.
ஏனெனில் அவை ஒன்றுடன் ஒன்று வேரோடு பின்னிப்பிணைந்தது. அதனால்தான் திராவிடத்தையும், பத்திரிகையாளர்களையும் பிரித்துப் பார்க்க முடியாது. ஜனநாயக நாட்டிலே 4 தூண்கள் என்று சொன்னால், அதில் ஒரு தூண் பத்திரிகைதான் என்று மாவட்ட ஆட்சியர் கூறினார். ஒரு ஜனநாயகத்தில் பத்திரிகையாளரின் பங்கு முக்கியமானது. ஒரு ஜனநாயக நாட்டை உருவாக்க எப்படி சட்டமன்ற உறுப்பினர்கள் தேவையோ, அதுபோல பத்திரிகை துறை தேவை.