திருவண்ணாமலை:திருப்பதியை போல, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலிலும் கட்டண தரிசனம் வசூலிக்க இருப்பதாக அமைச்சர் எ.வ.வேலு பேசியுள்ளார். கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் (kalaignar magalir urimai thittam) திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 24ஆம் தேதி முதல் செயல்படுத்தப்பட்டு பயனாளிகளின் விண்ணப்பப் பதிவு முகாம் நடைபெற்று வருகிறது.
இந்த முகாமை இன்று தமிழ்நாடு பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு, தமிழ்நாடு துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ், சட்டமன்ற உறுப்பினர்கள் மு.பெ.கிரி, பே.சு.தி.சரவணன் ஆகியோர் திருவண்ணாமலை, மெய்யூர், வாணாபுரம், சதாகுப்பம் ஆகியப் பகுதிகளில் இன்று (ஜூலை 26) ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு,குடும்பத்தின் பாரம் அறிந்து குடும்பத்தை நடத்துவது பெண்கள்தான் என்றும்; ஆகவே அவர்களுக்கு ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை கிடைக்கும் வகையில் இந்தத் திட்டம் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களால் கொண்டுவரப்பட்டது என்றார். ஏற்கனவே, இதற்காக ரூ.7,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், வரும் ஆண்டுகளில் பயனாளிகளின் எண்ணிக்கையைப் பொறுத்து நிதி ஒதுக்கப்படும் என்றும், இதற்கு தகுதியானவர்கள் தவிர வேறு யாரும் இந்த திட்டத்தில் பயனடையப் போவதில்லை என்றும் அவர் கூறினார்.
திருவண்ணாமலை மாவட்டத்தைப் பொறுத்தவரை, 7 லட்சத்து 89 ஆயிரத்து 822 பொது விநியோக அட்டைகள் உள்ளது என்றும், மாவட்ட முழுவதும் 1,627 பொது விநியோக கடைகள் இயங்குவதாகவும், மாவட்டத்தில் 991 முகாம்கள் அமைக்கப்பட்டு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டு வருவதாகவும், இந்த பணிகளை கண்காணிக்க 221 மண்டல அலுவலர்கள் 70 கண்காணிப்பு அலுவலர்கள், 20 பிரிவுகளில் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் இந்தப் பணிகள் முறையாக நடைபெறுகிறதா? என்று தாம் ஆய்வு மேற்கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.