திருவண்ணாமலை மாவட்டத்தில் 80 வயதிற்கு மேற்பட்ட முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் நேரில் சென்று தபால் வாக்குகள் பெறும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில், செங்கம் தொகுதி, சின்ன கோலாபாடி கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் அதிமுக பால்வளத் துறை அமைச்சர் ராமச்சந்திரனின் அக்கா குப்பம்மாள் என்பவரது மனநிலை குன்றிய மாற்றுத்திறனாளி மகனான கார்த்திக்கிடம் தபால் வாக்கு பெறுவதற்காக அலுவலர்கள் வீட்டிற்கு சென்றுள்ளனர்.
அப்போது கார்த்திக் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்கும்படி செய்கையில் காட்டியதாக சொல்லப்படுகிறது. ஆனால், அலுவலர்களுடன் சென்ற உதவியாளர் சரவணன் என்பவர் கார்த்திக்கிடம் இருந்த தபால் ஓட்டைப் பிடுங்கி உதயசூரியன் சின்னத்திற்கு டிக் செய்ததாகக் கூறப்படுகிறது.
இதனைப் பார்த்த கார்த்திக்கின் தாய் குப்பம்மாள், உதவியாளர் சரவணனிடம் என் மகன் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்கச் சொல்லியும் நீங்கள் எப்படி உதயசூரியன் சின்னத்திற்கு டிக் செய்தீர்கள் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனை அடுத்து அங்கிருந்து அவசர அவசரமாக கிளம்பிய அலுவலர்களை பொதுமக்களும் அதிமுகவினரும் சுற்றி வளைத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.