திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்துள்ளது சாத்தனூர் அணை. தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இந்த அணை தமிழ்நாட்டிலுள்ள சுற்றுலாத் தளங்களில் ஒன்றாகும். இந்த அணையில் அதிகளவில் மீன் விடப்பட்டு வளர்க்கப்பட்டு வருகிறது. அரசு தரப்பில் டெண்டர் விடப்பட்டு அனணயிலேயே மீன் விற்பனை நிலையம் அமைத்து விற்பனை செய்யப்படுகிறது.
இரவு நேரத்தில் மீன் பிடிக்கச் சென்றவர் முதலை கடித்து உயிரிழப்பு
திருவண்ணாமலை: சாத்தனூர் அணையில் இரவு நேரத்தில் மீன் பிடிக்கச் சென்ற ஒருவர் முதலை கடித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது ஒருபுறம் இருக்க அணையின் கரையோர பகுதியில் உள்ள கிராம மக்கள் கள்ளத்தனமாக இரவு நேரங்களில் மீன்பிடிக்க செல்வது வழக்கம். இரவு நேரங்களில் ஆற்றுப் படுகைகளில் மீன் பிடித்து ஊர் பகுதிகளில் விற்று நல்ல லாபம் பார்த்து வந்தனர்.
அவ்வாறு சாத்தனூர் அணையில் இரவு நேரத்தில் மீன்பிடிக்கச் சென்ற புளியங்குளம் பகுதியை சேர்ந்த முருகேசன் என்பவரை அணையில் உள்ள முதலை கடித்துள்ளது. காலையில் அரசு ஒப்பந்ததாரர்கள் மீன்பிடிக்க செல்லும்போது முதலை கடித்து இறந்து கிடந்த முருகேசனை கண்டு சாத்தனூர் அணை காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். பின்னர், விரைந்து சென்ற காவல்துறையினர் முருகேசனின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.