திருவண்ணாமலை மாவட்டம், கிரிவலப்பாதையில் உள்ள மின்நகர் பகுதியில் கடந்த 2008ஆம் ஆண்டு முதல் ரமேஷ் என்பவர் யோகா மையம் நடத்தி வருகிறார். இவரிடம் லத்திகா ஸ்ரீ (4.5) என்ற சிறுமி யோகா பயின்று வருகிறார். திருவண்ணாமலை இடுக்குப் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த சிவக்குமார், சந்திரா தம்பதியரின் மகளான லத்திகா ஸ்ரீ, யூகேஜி படித்து வரும் நிலையில், கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்த விரும்பியுள்ளார்.
இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்டு சாதனை புத்தகத்தில் இடம் பெறுவதற்காக 200 கிலோ ஐஸ் கட்டி மீது சமகோண ஆசனம் செய்ய நினைத்த மாணவி லத்திகா ஸ்ரீ, அதை கரோனா விழிப்புணர்வாகவும் மாற்றினார். இந்த ஆசனத்தை 10 நிமிடங்கள் செய்து காட்டினார். ஐஸ் கட்டி மீது பத்து நிமிடங்கள் சமகோண ஆசனத்தில் ஈடுபடும் லத்திகா ஸ்ரீ, சாதாரண பரப்பில் ஒரு மணிநேரம் செய்வதாக துள்ளலாகக் கூறுகிறார்.