திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே உள்ள சேதாரம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த தனியார் பேருந்து ஊழியர் ரகு. இவருக்கு பரிமளா என்ற மனைவியும், கிருபாஸ்ரீ (வயது 5), நர்மதா (வயது 2) என இரு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் இன்று காலையில் (செப்.19) வழக்கம்போல் சேதாரம்பட்டு கிராமத்தின் ஏரிக்கரை அருகில் உள்ள தங்களுடைய சொந்த நிலத்தில் பரிமளா மாடுமேய்த்து கொண்டிருந்தார்.
அப்போது மற்ற குழந்தைகளுடன் அவர்களது நிலத்தின் அருகே விளையாடிக் கொண்டிருந்த மூத்த மகள் கிருபாஸ்ரீ, கால் தவறி அருகில் இருந்த விவசாயக் கிணற்றில் விழுந்தார். தொடர்ந்து, குழந்தையின் தாய் பரிமளா வந்து கூச்சலிட்டு தன்னுடைய மகளைக் காப்பாற்றுமாறு கதறி அழுத நிலையில், அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் கிணற்றில் மூழ்கி அச்சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனையடுத்து ஆரணி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கபட்டது. ஆனால் கால தாமதமாக வந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடியும் சிறுமியின் உடலை மீட்க முடியவில்லை. பின்னர் சிறுமியின் தந்தை ரகு கிணற்றில் இறங்கி அவரைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, அவரது உடல் கிணற்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டது.