திருவண்ணாமலை அடுத்த நரியாப்பட்டு கிராமத்தில் கடந்த 16 ஆண்டுகளாக தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க கட்டடத்தில் அரசு மதுபானக் கடை செயல்பட்டுவந்தது. அக்கட்டடம் பழுதடைந்த நிலையில், அரசு மதுபானக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற அலுவலர்கள் திட்டமிட்டனர். அதன்படி, புதிய இடத்தை தேர்வு செய்து இடத்தின் உரிமையாளரின் ஒப்புதலோடு அந்த இடத்திற்கு கடையை மாற்ற அலுவலர்கள் பல்வேறு கட்ட ஆய்வுகள் நடத்தி, அறிக்கையை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட துறை அலுவலர்களிடம் சமர்ப்பித்தனர்.
இந்நிலையில், நரியாப்பட்டு பகுதியைச் சேர்ந்த மதுப்பிரியர்கள் சிலர், தங்கள் கிராமத்தில் 16 ஆண்டுகளாக செயல்பட்டுவந்த மதுக்கடையை திறக்க வேண்டும் என ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்துள்ளனர். மதுக்கடை தங்கள் ஊரில் இருந்தபோது எவ்வித சட்டம் ஒழுங்கு பிரச்னையும் ஏற்படவில்லை எனவும் அந்த மனுவில் கூறியுள்ளனர்.