மகா சிவராத்திரி உருவான திருத்தலம் எனும் பெருமைக்குரியது திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில். இங்கு பிரம்மாவுக்கும் திருமாலுக்கும் இடையே ஏற்பட்ட 'நான்' எனும் அகந்தையை அழித்து, லிங்கோத்பவ மூர்த்தியாக சிவபெருமான் எழுந்தருளிய திருநாள் மகா சிவராத்திரி விழாவாகக் கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டு மகா சிவராத்திரி விழா, அண்ணாமலையார் கோயிலில் நேற்று (மார்ச்.12)விமரிசையாக நடந்தது. அதையொட்டி அதிகாலை 3 மணிக்கு அண்ணாமலையாருக்கும், உண்ணாமலையம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அதிகாலை 5 மணி முதல் பகல் 12.30 மணி வரை லட்சார்ச்சனை நடைபெற்றது. மற்றும் பகல் 12 மணிக்கு உச்சிகால அபிஷேகமும், மாலை 5 மணிக்கு சாயரட்சை அபிஷேகமும் நடைபெற்றது. பின்னர், இரவு 8 மணிக்கு சந்திரசேகரர் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
மகா சிவராத்திரியை முன்னிட்டு நேற்று இரவு முழுவதும் கோயில் நடை திறந்திருந்தது. தொடர்ந்து இரவு நான்கு கால பூஜை நடைபெற்றது. முதல் கால பூஜையை பிரம்மாவும், இரண்டாம் காலபூஜையை திருமாலும், மூன்றாம் கால பூஜையை உமையாளும், நான்காம் கால பூஜையை முப்பத்து முக்கோடி தேவர்களும் நிறைவேற்றுவதாக ஐதீகம்.