திருவண்ணாமலை: பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் தமிழ்நாட்டின் முக்கிய ஆன்மிக கோயில்களில் ஒன்றாகும்.
இந்த கோயிலுக்கு தமிழ்நாடு மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் இருந்தும், வெளிநாட்டில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். ஒவ்வொரு பெளர்ணமி அன்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வது வழக்கம்.
இந்நிலையில், அண்ணாமலையார் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு நாள்தோறும் திருக்கோயில் சார்பில், லட்டு பிரசாதம் வழங்கும் திட்டத்தினை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று (டிச.31) சென்னையில் காணொலிக் காட்சி மூலமாக துவக்கி வைத்தார்.
இதன் ஒரு பகுதியாக, அண்ணாமலையார் திருக்கோயில் கலையரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி பங்கேற்று, பத்தர்களுக்கு லட்டு பிரசாதம் வழங்கும் திட்டத்தினை துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ், திருக்கோயில் இணை ஆணையர் ஜோதி, அறங்காவலர் குழு தலைவர் ஜீவானந்தம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பக்தர்களுக்கு லட்டு பிரசாதங்களை வழங்கினர்.
முன்னதாக, ஆன்மிக மாதம் என்று கூறப்படும் மார்கழி மாதத்தில் திருவாதிரை நட்சத்திரத்தில் ஆருத்ரா தரிசனம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு ஆருத்ரா தரிசனம் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஐந்தாம் பிரகாரத்தில் உள்ள கால் மண்டபத்தில் கடந்த டிச.27 அன்று நடைபெற்றது.
மேலும், இந்த ஆண்டு கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி, கடந்த நவ.26ஆம் தேதி அண்ணாமலையார் கோயில் கருவறை முன்பு, அதிகாலை 4 மணி அளவில் பரணி தீபமும், மாலை 6 மணி அளவில் கோயில் பின்புறம் உள்ள 2 ஆயிரத்து 668 அடி உயரம் உள்ள மலையின் மீது மகா தீபமும் ஏற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட ஹாலிவுட் நடிகர் காலமானார்!