தமிழ்நாடு முழுவதும் ஏரிகளில் அப்பகுதி விவசாயிகளின் பங்களிப்புடன், குடிமராமத்து திட்டம் செயல்படுத்தப்பட்டுவருகிறது. அந்த வகையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் ரூ. 31.20 கோடி மதிப்பீட்டில், 59 ஏரிகள் புனரமைக்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றன..
அதன் ஒரு பகுதியாக, புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியம், காரப்பட்டு ஏரியில் பொதுப்பணித்துறையின் நீர்வள ஆதார அமைப்பு மூலம் தமிழ்நாடு முதலமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூ. 96 லட்சம் மதிப்பீட்டில் புனரமைப்பு பணிகள் நடைபெறுகின்றன.
காரப்பட்டு ஏரியில் மீண்டும் 3 மதகுகள் கட்டுதல், 3.5 கி.மீ நீளமுள்ள ஏரிக் கரையை பலப்படுத்துதல், 5 கி.மீ நீளமுள்ள நீர்வரத்து கால்வாய் தூர்வாருதல், ஏரியின் எல்லைகளை அளந்து ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
இப்பணிகள் மூலம் 471 விவசாய நிலங்கள் கூடுதல் பாசன வசதி பெறும். காரப்பட்டு ஏரியில் நடைபெறும் குடிமராமத்து பணிகளை இன்று மாவட்ட ஆட்சியர் கந்தசாமி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு உதவி செயற்பொறியாளர் சுப்பிரமணியன், விவசாயிகள், பொதுமக்கள் ஆகியோர் உடனிருந்தனர்.
குடிமராமத்து பணிகளை ஆய்வு செய்யும் மாவட்ட ஆட்சியர் கந்தசாமி இதையும் படிங்க:பெண் சிசுக்கொலை: போலீசாரின் அதிரடி நடவடிக்கை