திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியிலுள்ள இமாலயா ஹோட்டலில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ். அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறுகையில், "மாணவர்கள் நீட் தேர்வு அச்சத்தின் காரணமாக தற்கொலைக்கு முயற்சி செய்கின்றனர். நீட் தேர்வுக்கு உண்டான பாடத்திட்டம் வேறு, தமிழ்நாடு மாணவர்கள் பயிலும் பாடத்திட்டம் வேறு என்பதால் நீட் தேர்வை நமது மாணவர்கள் எதிர்கொள்வதற்கு கடினமாக உள்ளது.
தமிழ்நாடு மாணவர்கள் இதுவரை பயின்று வந்த பாடத்திட்டத்திற்கும் நீட் தேர்வில் கேட்கப்படும் கேள்விகளுக்கும் சம்பந்தமில்லாமல் உள்ளது. இந்தியாவில் ஒரே மாதிரியான கல்வி முறை சாத்தியமில்லை, காரணம் சமூகம், சமூக வளர்ச்சி ஒரே மாதிரியாக இருந்தால் தான் தேர்வு முறை, பாட முறையும் ஒரே மாதிரியாக இருக்க முடியும்.
மதசார்பற்ற கட்சிகளின் கூட்டணி தலைவராக இருக்கும் திமுக தலைவர் ஸ்டாலின், நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று சொல்லி இருக்கிறார். இது வரவேற்க வேண்டிய அம்சம், தமிழ்நாடு அரசும் இதில் ஒரு தெளிவான நிலைபாட்டை எடுத்து இங்கு ஒன்று பேசுவதும் டெல்லியில் ஒன்று பேசுவதும் இல்லாமல் இங்கு பேசுவதையே டெல்லியிலும் பேசி மத்திய அரசை தன்னுடைய நிலைக்கு கொண்டுவர வேண்டும் என முதலமைச்சரைக் கேட்டுக்கொள்கிறேன்.