திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா டிசம்பர் 1ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10ஆம் தேதிவரை நடைபெறவுள்ளது.
இத்திருவிழாவிற்கான முன்னேற்பாடுகள் குறித்து, அனைத்து துறை அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக அரங்கில் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, பல்வேறு துறை அலுவலர்களும் கலந்துகொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், ‘கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி 15 தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்படவுள்ளது. இதற்காக 2,500 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. 2.5 கிலோ மீட்டர் தூரம் வரை ஆட்டோ கட்டணம் 20 ரூபாயாகவும், அதற்கு மேல் சென்றால் 25 ரூபாயாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், 13 நிலையான மருத்துவ முகாம்கள் ஆம்புலன்ஸ் வசதியுடன் தயார் நிலையில் இருக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திருவிழாவையொட்டி 8,500 காவலர்களும், 447 தீயணைப்பு வீரர்களும், 29 தீயணைப்பு வாகனங்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. கோயிலுக்கு வெளியே 119 இடங்களிலும், உள்ளே 237 இடங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும். மேலும் 2,500 பக்தர்களுக்கு மட்டுமே மலை ஏறுவதற்கு அனுமதி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: திருக்கார்த்திகை தீபம்: பக்தர்களின் வசதிக்காக 2,500 சிறப்புப் பேருந்து!