திருவண்ணாமலை மாவட்டம், ஜமுனாமரத்தூர் மலைப் பகுதியைச் சேர்ந்த 14 பேர் கர்நாடக மாநிலம், ஹாசன் மாவட்டம், பேலூர் தாலுகாவில் உள்ள சிக்கனஹல்லி கிராமத்தில் மிளகு தோட்டத்தில் கூலி வேலை செய்து வந்துள்ளனர். இந்த ஐந்து குடும்பங்களைச் சேர்ந்த 14 பேரும் ஊரடங்கு பிறப்பிக்கப்படும் முன்பு, சொந்த ஊருக்குத் தனியார் வாகனத்தில் ஒன்றாகக் கிளம்பி வந்துள்ளனர்.
அப்போது ஊரடங்கு உத்தரவு அறிவிப்பு வெளியானதால், அழைத்து வந்த வாகன உரிமையாளர் கர்நாடக எல்லையிலேயே 14 பேரையும் இறக்கி விட்டுவிட்டு சென்றுவிட்டார். எனவே செய்வதறியாது இது நாள்வரை தவித்து வந்த 14 பேரும்; திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்திருந்தனர்.
திருவண்ணாமலை மக்கள் மீட்பு அதன் பேரில் மாவட்ட முன்னாள் ராணுவ வீரர்கள் நலத்துறை சார்பில், அவர்களை மீட்டு வேன் மூலம் திருவண்ணாமலை அழைத்து வந்து, கரோனா ரேபிட் கருவி மூலம் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் யாருக்கும் கரோனா நோய்த் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.
பின்னர் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டு, மாவட்ட ஆட்சியர் கந்தசாமி ஒவ்வொரு குடும்பத்திற்கும் அரிசி, பருப்பு, எண்ணெய், புளி உள்ளிட்ட மளிகைப் பொருட்களை இரண்டு பைகளில் கொடுத்து 14 பேருக்கும் தலா ஆயிரம் ரூபாய் தந்தும் சொந்த ஊரான ஜமுனாமரத்தூருக்கு அனுப்பி வைத்தார்.
இதையும் படிங்க: நாட்டுப் படகுகள் உரிய கட்டுப்பாடுகளுடன் மீன்பிடிக்க அனுமதி - தமிழ்நாடு அரசு