தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'நிலத்தடி நீர் சேமிப்பு - தி.மலையை முதல் மாவட்டமாக கொண்டு வர முயற்சி' - ஆட்சியர் - tiruvannamalai

திருவண்ணாமலை: இந்திய அளவில் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் திருவண்ணாமலை மாவட்டமும் உள்ளதாகவும், நிலத்தடி நீர் சேகரிப்பில் முதல் மாவட்டமாக திருவண்ணாமலையை கொண்டு வரும் முனைப்புடன் மாவட்ட நிர்வாகம் செயல்படுகிறது என்றும் ஆட்சியர் கே.எஸ். கந்தசாமி தெரிவித்திருக்கிறார்.

jal-shakti-abhiyan

By

Published : Sep 4, 2019, 1:21 PM IST

திருவண்ணாமலை மாவட்ட வேளாண் அறிவியல் மையம் சார்பில் நடைபெற்ற உழவர் கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் கே.எஸ். கந்தசாமி திறந்து வைத்து பார்வையிட்டார். இந்த கண்காட்சியில் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, தீயணைப்புத்துறை மற்றும் வேளாண் அறிவியல் மையம் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. வேளாண்மைத்துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த அரங்குகளில், வேளாண்மையில் நீர் மேலாண்மை தொழில்நுட்பங்கள், வீடுகளில் மழைநீர் சேகரிப்பு, குறைந்த நீரில் அதிக விளைச்சல் பெறும் மாற்றுப்பயிர் சாகுபடி, பல்வேறு பயிர்களின் நீர்த்தேவை, நெல் சாகுபடியில் நீர் குழாய் தொழில்நுட்பம் ஆகியவை குறித்து விவசாயிகளுக்கு விளக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து நடைபெற்ற உழவர் விழாவை மாவட்ட ஆட்சியர் கே.எஸ். கந்தசாமி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். தொடர்ந்து விழாவில் பேசிய அவர், தமிழ்நாட்டிலேயே நெல் உற்பத்தியில் திருவண்ணாமலை மாவட்டம் முதலிடத்தில் உள்ளதாகவும், மணிலா சாகுபடியில் திருவண்ணாமலை மாவட்டம் முதலிடத்தைப் பிடிக்கும் எனவும் தெரிவித்தார். இந்திய அளவில் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் திருவண்ணாமலை மாவட்டமும் உள்ளதாகவும், நிலத்தடி நீர் சேகரிப்பில் முதல் மாவட்டமாக திருவண்ணாமலையை கொண்டு வரும் முனைப்புடன் மாவட்ட நிர்வாகம் செயல்படுகிறது எனவும் கூறினார்.

ஜல் சக்தி அபியான் திட்டத்தின் கீழ் நடைபெற்ற உழவர் விழா மற்றும் கண்காட்சி

விவசாயத்திற்கு தேவையான நீரின் அளவை குறைப்பதற்கான தொழில்நுட்பங்களை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்றும் மண் வளம் காக்கவும், குறைந்த நீரில் அதிக உற்பத்தி, ஆகியவற்றுக்கு விவசாயிகள் ஒருங்கிணைந்து ஒரே மாதிரியான பயிர்களை சாகுபடி செய்ய வேண்டும் எனவும் ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து சிறுதானிய பயிர் சாகுபடியில் நவீன தொழில்நுட்பங்கள் என்ற தலைப்பில் சிறுதானிய மகத்துவ மைய தலைவர் பி. பரசுராமன், நீர்வடிப்பகுதி மேலாண்மை என்ற தலைப்பில் நபார்டு வங்கி மாவட்ட வளர்ச்சி மேலாளர் வி. ஸ்ரீராம், வேளாண்மையில் நீர் மேலாண்மை தொழில்நுட்பங்கள் குறித்து வேளாண் கல்லூரி இணைப் பேராசிரியர் எஸ். அன்புமணி, வேளாண்மையில் காலநிலை மாற்றத்தின் தாக்கம் குறித்து வேளாண் அறிவியல் மைய தொழில்நுட்ப வல்லுநர் பி. நாராயணன் ஆகியோர் உரை நிகழ்த்தினர். இவ்விழாவில் துறை சார்ந்த அலுவலர்கள், நூற்றுக்கணக்கான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details