திருவண்ணாமலை:சமையலுக்கு உபயோகப்படுத்திய எண்ணெயை மீண்டும் மீண்டும் வறுக்கும்போது மனித நுகர்வுக்கு 25 விழுக்காட்டிற்கு மேலாக உள்ள Total Polar Compounds (மொத்த துருவ கலவைகள்) பயன்படுத்தும்போது பாதுகாப்பற்றதாக மாறிவிடுகிறது.
பலமுறை உபயோகப்படுத்திய எண்ணெயைப் பயன்படுத்தும்போது எண்ணெயில் உள்ள ஊட்டச்சத்து உள்ளிட்ட பண்புகள் பாதிக்கப்படுகின்றன. இதனால் பல்வேறு உடல் பாதிப்புகள் ஏற்படும் இடர் உள்ளது. குறிப்பாக
புற்று நோய், இதய பாதிப்பு, நெஞ்சு எரிச்சல், உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன், ஞாபக மறதி, கொழுப்பு, கல்லீரல் சம்பந்தமான உடல் உபாதைகள்
ஏற்பட முக்கியக் காரணமாகிவிடுகிறது. இதைத் தவிர்க்கும்பொருட்டு இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயத் துறை - பெட்ரோலியத் துறை இணைந்து உபயோகப்படுத்திய எண்ணெயினை பயோ டீசலாக மாற்ற திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
எனவே நாடு முழுவதும் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயத் துறையால் அங்கீகரிக்கப்பட்ட 33 பயோ டீசல் தயாரிப்பாளர்கள், 19 அனுமதிக்கப்பட்ட நிறுவனங்கள் மூலம் பயன்படுத்திய எண்ணெய் வாங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் பயன்படுத்திய எண்ணெய் வாங்க அங்கீகரிக்கப்பட்ட தனலக்ஷ்மி கெமிக்கல் இண்டஸ்ட்ரி லிமிட்டெட் நிறுவனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் நாள் ஒன்றுக்கு 50 லிட்டர்களுக்கு மேல் பயன்படுத்தப்படும் அனைத்து உணவகங்கள், இனிப்பு-கார வகைகள் தயாரிக்கும் கடைகள், துரித உணவகங்கள் ஆகியவற்றில் பயன்படுத்திய எண்ணெய் அளிக்கப்பட்டு, அதிலிருந்து பயோ டீசல் தயாரிக்கும் திட்டம் மாவட்ட ஆட்சியரால் தொடங்கிவைக்கப்பட்டது.