திருவண்ணாமலை:சேத்பட் அடுத்த தத்தனூர் மதுரா கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பார்த்திபன். இவரது மனைவி அஞ்சலி தேவி. இவர்களுக்கு மூன்று வயது மகளும் மற்றும் இரண்டு வயது மகன் மற்றும் ஆறு மாத ஆண் குழந்தையும் உள்ளது. இவருக்கு நான்கு ஏக்கர் நிலம் சொந்தமாக உள்ள நிலையில் இவரது நிலத்தில் விவசாய பயன்பாட்டிற்காகக் கிணறு வெட்ட முயன்று உள்ளார். அப்போது இவரது நிலத்தில் அருகே உள்ள குருவர், அர்ஜுனன், துரைசாமி, செல்வம், சீனிவாசன், தவமணி உள்ளிட்ட உறவினர்கள் பார்த்திபனைக் கிணறு வெட்டக்கூடாது எனத் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
இவர் கிணறு வெட்டுவதால் தங்களுக்குப் பாதிப்பு ஏற்படுவதாகக் கூறி சேட்பட் காவல் நிலையத்தில் பார்த்திபன் மீது புகார் மனு அளித்துள்ளனர். இதனை அடுத்துப் பல முறை காவல் நிலையத்தில் தனது தரப்பு நியாயத்தைக் கூறியும் காவல் துறையினரிடம் பார்த்திபனுக்கு உரிய நிவாரணம் கிடைக்காத நிலையில் மன உளைச்சல் அடைந்த பார்த்திபன் இன்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனது ஆறு மாத கைக்குழந்தை உட்பட 3 குழந்தைகள் மற்றும் மனைவியுடன் தீ குளிக்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.