திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த தோக்கவாடி பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரது மகன் அபி என்கின்ற கௌதம். இவர் கடந்த வாரம் குப்பநத்தம் பகுதியில் உள்ள உறவினரை சந்திக்க சென்றுள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த புதுப்பாளையம் காவல் நிலையத்தில் ரைட்டராக வேலை பார்த்து வரும் ஈஸ்வரன். மூன்று நாட்கள் விடுப்பில் இருந்து வந்துள்ளார்.
குப்பநத்தம் பேருந்து நிலையம் அருகே அந்த கெளதம் என்ற இளைஞர் வாகனத்தில் வந்துள்ளார். அப்போது இளைஞரை வழிமறித்த காவலர் ஈஸ்வரன் எங்கே சென்று வருகிறாய், எந்த ஊர் என விசாரித்துள்ளார். அதற்கு அந்த இளைஞர் தோக்கவாடி என்று கூறியுள்ளார். இந்நிலையில், காவலர் ஈஸ்வரன், அம்பேத்கர் படம் பொறித்த பனியனை போட்டுக்கொண்டு இந்தப் பக்கம் வரலாமா என்று எனக் கூறி ஒருமையில் பேசினார்.
இதனைத்தொடர்ந்து, அந்தக் காவலர் சாதி வெறியுடன் அந்த இளைஞரை முட்டிப்போட வைத்து கொலை குற்றவாளியை தண்டிப்பதுபோல் கேபிள் டிவி ஒயரால் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளார். அப்போது கூட்டம் கூடிய மக்கள் காவலரின் செயலைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து காவலர் ஈஸ்வரன் அந்த இளைஞரை தாக்குவதை அங்கிருந்த பொதுமக்கள் செல்போனில் படம்பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இதனைக் கண்ட சமூக ஆர்வலர்கள், நெட்டிசன்கள் அம்பேத்கர் பனியன் அணிந்து வந்ததற்காக இளைஞரை தாக்கிய காவலரை கடுமையாக விமர்சித்தனர்.
காவலரின் கொலைவெறித் தாக்குதலுடன், உடம்பு முழுவதும் ரத்த காயங்களுடன் வீடு திரும்பிய அந்த இளைஞர் சிகிச்சைக்காக செங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.