1330 திருக்குறளை எழுதி தமிழ் ஆசிரியை உமாராணி சாதனை திருவண்ணாமலை: உலகில் கரோனா பெருந்தொற்று மீள முடியாத பெரும் சவாலாக அமைந்திருந்தாலும், ஒவ்வொருவரின் தனிப்பட்ட திறமைகளையும் எண்ணங்களையும் வெளிப்படுத்தக்கூடிய வாய்ப்பாக அமைந்தது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் வி.ஏ.கே.நகர் பகுதியைச் சேர்ந்த கண்ணன், உமாராணி தம்பதியிருக்கு 2 மகள்கள் உள்ளனர்.
இதில் உமாராணி கடந்த 24 ஆண்டுகளாக அரசுப் பள்ளியில் தமிழ் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். தற்போது ஆரணி அருகே உள்ள எஸ்.வி.நகரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ் ஆசிரியையாக பணியாற்றி வரும் இவருக்கு, தமிழ் மொழி வளர்ச்சிக்கு ஏதேனும் செய்தல் வேண்டும் என நினைத்துள்ளார்.
இதற்கு வழிசெய்யும் வகையில் உமாராணிக்கு பொக்கிஷ காலமாக அமைந்தது கரோனா ஊரடங்கு. கரோனா ஊரடங்கில், உலகமே வீட்டில் முடங்கிக் கிடந்த போது, இந்த நேரத்தைத் தமிழ் மொழி வளர்ச்சிக்குச் செலவிட முடிவு செய்துள்ளார். இதனால், ஓய்வு நேரத்திலிருந்த போது தமிழ்மொழியில் கவிதைகள் மற்றும் நூல்கள் எழுத தொடங்கியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து தமிழ்மொழியின் புது முயற்சியாக, திருக்குறளைத் தேசிய நூலக அறிவிக்கக் கோரி, சோயாபீன்ஸ் அகல்விளக்கு கை வளையல், கழுத்தில் அணியும் மணி, ரூபாய் நாணயம் மற்றும் குடைகளில் தேசிய கொடி உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்களில் 1330 திருக்குறளை எழுதி சாதனை படைத்துள்ளார்.
இதனை 'ஆல் இண்டியா புக்ஸ் ஆப் ரெக்கார்டு'(ALL INDIA BOOKS OF RECORD) மற்றும் வாழ்நாள் சாதனையாளர் விருது, நல்லாசிரியர் விருது உள்ளிட்ட, இதுவரையில் 70க்கும் மேற்பட்ட விருதுகளைத் தமிழ் ஆசிரியை உமாராணி பெற்றுள்ளார். மேலும் தமிழ்ப் பற்றால் பல சாதனைகளைப் புரிந்த தமிழ் ஆசிரியை உமாராணியைக் கண்டு பாண்டிச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் நேரில் அழைத்து, அவரை கௌரவித்து பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.
இதே போல அரசுப் பள்ளி மாணவ மாணவிகளும் தமிழ்மொழி வளர்ச்சியில் சாதனை புரிய வேண்டும் என்பதற்காக, அவர்களை ஊக்குவிப்பதோடு, சிறப்பு முயற்சிகளையும் எடுத்து வருகிறார் தமிழ் ஆசிரியை உமாராணி.
இதையும் படிங்க:மூடப்பட்ட எண்ணெய் கிணற்றில் எரிவாயு வெளியேற்றம்..! கிராம மக்கள் அச்சம்! நடவடிக்கை எடுக்க கோரிக்கை!