திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அண்ணா சிலை அருகே தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தில், 60க்கும் மேற்பட்ட அரசுத் துறைகளில் காலியாக உள்ள நான்கு லட்சம் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், சாலை பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்ட 41 மாத காலத்தை பணிக்காலமாக கருதி ஊதியம் வழங்க வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவி ஆய்வாளர் உள்ளிட்டோருக்கு காலமுறை ஊதியம் வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தொடர் சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி, இன்று ஆறாவது நாளாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 70 பெண்கள் உட்பட 150 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். இன்று அரசு விடுமுறை நாள் என்பதால் அரசு ஊழியர்கள் போராட்டத்தில் அதிக அளவில் ஈடுபடுவர் என முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வழக்கத்தை விட நூற்றுக்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டிருந்தனர்.