திருவண்ணாமலை:கலசபாக்கம் அடுத்துள்ள கடலாடி பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 350க்கும் மேற்பட்ட மாணவர்கள் வந்து படித்து வருகின்றனர்.
மேலும் இந்த அரசு மேல்நிலைப் பள்ளியில் 20க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பாடங்களை எடுத்து வருகின்றனர். இந்த பள்ளிக்கு தலைமை ஆசிரியராக அண்ணாமலை என்பவரும் உள்ளார். பின்னர் இந்த பள்ளியில் மாற்றுத்திறனாளி ஆசிரியர் செழியன் என்பவரும் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் தலைமை ஆசிரியருக்கும் இடையே பல மாதங்களாக அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
மல்லுக்கட்டிய ஆசிரியர்கள்
இந்நிலையில், நேற்று (ஜன. 29) அவர்களுக்குள் இடையே மீண்டும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இருவரிடையே ஏற்பட்ட பிரச்சனை வாக்குவாதமாக மாறியுள்ளது. திடீரென இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. அப்போது தலைமை ஆசிரியரும், ஆசிரியர் செழியனும் ஒருவரை ஒருவர் சட்டையை பிடித்து கொண்டும் கீழே விழுந்து தாக்கி கொண்டனர். பின்னர் அவர்களை மற்ற ஆசிரியர்கள் தடுத்து நிறுத்தி சமாதானம் செய்தனர்.
அதனைத் தொடர்ந்து இருவரும் தாக்கிக் கொண்டதை அங்கிருந்த ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பரவவிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த பொதுமக்கள், மற்ற ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.