திருவண்ணாமலை:ஆரணி அடுத்த மருசூர் கிராமத்தில் வசித்து வருபவர் மூதாட்டி கற்பகம் (வயது 63). இவரது கணவன் கடந்த சில வருடங்களுக்கு முன் உயிரிழந்த நிலையில் தனது மகளைத் திருமணம் செய்து கொடுத்து விட்டு தனியாக வீட்டில் வசித்து வருகிறார்.
இந்நிலையில், வழக்கம் போல நேற்று (ஜனவரி 09) மூதாட்டி கற்பகம் தனது வீட்டின் கதவுகளைப் பூட்டிக்கொண்டு தனியாக உறங்கி உள்ளார். அப்போது, வீட்டின் பின்புறம் உள்ள கதவுகளை மர்ம நபர்கள் உடைத்து வீட்டிற்குள் வந்ததாகக் கூறப்படுகிறது. அங்கு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டி முகத்தின் மீது மயக்கம் மருந்து தெளித்து, மயக்கம் அடையச் செய்துள்ளனர்.
பின்னர், மூதாட்டியின் கழுத்தில் அணிந்திருந்த 5 சவரன் தங்க நகை மேலும் அறையில் இருந்த பீரோவை உடைத்து 15 சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளிப் பொருள்களைத் திருடியுள்ளனர். மேலும், 12 ஆயிரம் ரூபாய் ரொக்க பணத்தையும் எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடியதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து, தகவல் அறிந்து வந்த திருவண்ணாமலை மாவட்ட தடயவியல் நிபுணர் தேவிப்பிரியா தலைமையில் தடயவியல் குழுவினர் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கிராமத்தில் பூட்டை உடைத்து வீட்டில் நுழைந்து நகைகளைத் திருடிய சம்பவம் கிராம மக்களிடையே சோகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க:சூட்கேசில் சிறுவன் சடலம்; தாய் கைது.. 36 மணி நேரத்திற்கு முன் கொல்லப்பட்டதாக தகவல்!