திருவண்ணாமலை: செங்கல்பட்டில் செயல்பட்டு வரும் வீரமங்கை வேலுநாச்சியார் அறக்கட்டளையை நடத்தி வருபவர் பாலாஜி. இவருடன், சென்னை வந்தவாசி அருகேயுள்ள, சென்னாவரம் கிராம நிதி உதவி பள்ளி தலைமை ஆசிரியர் அந்தோணி தாஸ் உட்பட மூன்று பேர், வந்தவாசி சுற்றியுள்ள அம்மணம்பாக்கம், கெங்கம்பூண்டி, கல்லாங்குத்து, கள்ளப்புலியூர் உள்ளிட்ட பல்வேறு கிராம மக்களிடம் 1,250 ரூபாய் வசூல் செய்து, குறிப்பிட்ட நபர்களுக்குத் தையல் எந்திரம், ஆடு, மாடு உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கியிருக்கின்றனர்.
இதைக் கண்டு பொதுமக்கள், அவர்களிடம் மேலும் பணம் கட்ட தொடங்கியுள்ளனர். இதில், 7,000க்கும் மேற்பட்ட நபர்களிடம் 1,250 ரூபாய் விதம், 80 லட்சம் ரூபாய் வசூல் செய்துள்ளார்கள். இந்தப் பணம் அனைத்தையும், நிதி உதவி பள்ளி தலைமையாசிரியர் அந்தோணி தாஸ் வசூல் செய்து, செங்கல்பட்டைச் சேர்ந்த பாலாஜியிடம் கொடுக்கப்பட்டு, வீரமங்கை அறக்கட்டளை வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.