தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 13, 2019, 10:48 AM IST

ETV Bharat / state

ஓய்வுபெற்ற ஆசிரியை கொலை வழக்கில் நால்வர் கைது...

திருவண்ணாமலை: ஓய்வுபெற்ற ஆசிரியை கொலை வழக்கில் தொடர்புடைய நான்கு குற்றவாளிகளை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

நான்கு பேர் கைது

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகே உள்ள முனியந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் லூர்துமேரி. ஓய்வு பெற்ற ஆசிரியை இவருக்கு திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் இவர் கடந்த 5ஆம் தேதி இரவு அடையாளம் தெரியாத நபர்களால் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தார். அதோடு காவலுக்காக இருந்த நாயும் கொலை செய்யப்பட்டு கிடந்தது.

இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் பணம், நகையை கொள்ளையடிக்க கொள்ளையர்கள் லூர்துமேரியை கொலை செய்திருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபிசக்ரவர்த்தி உத்தரவின் பேரில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அசோக்குமார் தலைமையிலான தனிப்படையினர் கொலைகாரர்களை தேடிவந்தனர். இதில் லூர்துமேரிக்கு சொந்தமான கடையில் கோழிகறி வியாபாரம் செய்துவந்த கருங்காலி குப்பம் சந்தைமேடு பகுதியைச் சேர்ந்த இலியாஸிடம்(30), தனிப்படை காவல்துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததால் சந்தேகமடைந்த காவல் துறையினர், அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தீவிரமாக விசாரித்ததில் உண்மை வெளிவந்தது.

இது குறித்து இலியாஸ் கூறியதாக காவல் துறையினர் தெரிவித்தது,''இலியாஸ், அவரது அண்ணன் வாலாஜா கல்மேல்குப்பம் கிராமத்தை சேர்ந்த மூசா (40), பாத்திர வியாபாரி யூசுப் (36), ராணிப்பேட்டையை சேர்ந்த விஜயகுமார் (35) ஆகியோர் கடந்த 5ஆம் தேதி லூர்து மேரி வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது அவர் தனியாக இருப்பதை அறிந்த கும்பல் வீட்டிற்குள்ளே நுழைய முயன்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக வெளியில் வந்த லூர்துமேரி, இலியாஸை பார்த்து இந்த நேரத்தில் இங்கே எங்கு வந்தீர்கள் என கேட்டுள்ளார். அதற்கு இலியாஸ் நாய்க்கு சிக்கன் கொடுக்க வந்ததாக தெரிவித்துள்ளார். இதையடுத்து இலியாஸ் கொண்டு வந்த சிக்கன் துண்டுகளை வாங்கி நாய்க்கு லூர்துமேரி போட்டுள்ளார்.

அப்போது பின்புறமாக வந்த இலியாஸ் கூட்டாளிகள் இரும்பு கம்பி மூலம் ஆசிரியையை தாக்கியுள்ளனர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே படுகாயமடைந்து இறந்துள்ளார். அதேபோல் நாயையும் கம்பியால் அடித்துக் கொன்றுள்ளனர். பின்பு லூர்து மேரி உடலை வீட்டிற்குள்ளே தூக்கிச் சென்று சமையலறையில் அமர்ந்த நிலையில் கிடத்தி, அவர் அணிந்திருந்த சேலையின் ஒருமுனையை சிலிண்டரிலும், மறுமுனையை வீட்டிற்கு வெளியிலும் வைத்து தீவைத்துள்ளனர்.

பின்னர் வீட்டிலிருந்த தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். ஆனால் எதிர்பாராத விதமாக கொள்ளையர்கள் வைத்த தீ பாதியிலேயே அணைந்ததால் சிலிண்டர் வெடிக்கவில்லை'' எனத் தெரிவித்தாக காவல் துறையினர் கூறினார். இதை தொடர்ந்து நான்குபேரையும் ஆரணி நீதிமன்றத்தில் காவல் துறையினர் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


இதையும் படிங்க:பல ஆண்களுடன் தொடர்பு: தூத்துக்குடியில் பெண் எரித்துக் கொலை

ABOUT THE AUTHOR

...view details