திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சட்டவிரோதமாக இரவு, பகல் பாராமல் சில கும்பல்கள் மணல் வளங்களை கொள்ளையடித்து வருவது வாடிக்கையாக உள்ளது.
தற்போது நாடெங்கும் கரோனா தொற்று அதிகரித்து வரும் வேளையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 144 தடை உத்தரவு, கடந்த 3 மாதங்களாக அமலுக்கு வந்து, பொதுமக்கள் அனைவரும் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர்.
திருவண்ணாமலையில் ஊரடங்கைப் பயன்படுத்தி மணல் கடத்தல் - 5 பேர் கைது!
திருவண்ணாமலை: ஊரடங்கைப் பயன்படுத்தி, மணல் கடத்தலில் ஈடுபட்ட 5 பேரைக் கைது செய்த காவல் துறையினர், 3 இரு சக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.
இந்த ஊரடங்கை சிலர் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு பகல் நேரங்களில் மணல் குவித்து வைத்து விட்டு, இரவு நேரத்தில் மணல் கடத்தலில் ஈடுபட்டு வருகின்றனர்.
செங்கம் காவல் ஆய்வாளர் சாலமோன் ராஜாவுக்கு பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில், அவரது தலைமையிலான காவல் துறையினர் செங்கம் பகுதி முழுவதும் ரோந்துப் பணியில் ஈடுபட்டபோது, தீத்தாண்டப்பட்டுப் பகுதியில், செய்யாற்றில் திருட்டுத்தனமாக மணல் அள்ளிய மார்க்கபந்து மற்றும் மணிமாறன் ஆகிய இருவரையும் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
இதே போன்று புதுப்பட்டு குப்பன் - தோக்கவாடி பன்னீர் ஆகியோரையும் கைது செய்தனர். ஏற்கெனவே மணல் கடத்தலில் ஈடுபட்டு காவல் துறையினருக்கு பயந்து தலைமறைவாக இருந்த குயிலம் பகுதியைச் சேர்ந்த குமார் என்பவரையும் அதிரடியாக கைது செய்தனர். மேலும் மூன்று இருசக்கர வாகனங்களையும் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.
கடந்த வாரம் சவுடு மண் கடத்திய 10 பேர் கைது செய்யப்பட்டு - 2 ஜே.சி.பி மற்றும் 3 டிராக்டரையும் பறிமுதல் செய்த காவல் துறையினர், தற்போது மணல் கடத்தலில் ஈடுபட்ட 5 பேரைக் கைது செய்த சம்பவத்தால் செங்கம் காவல் துறையினருக்கு இப்பகுதி மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.