தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 12, 2021, 8:18 PM IST

ETV Bharat / state

கரோனா வார்டில் முதல் பிறந்த நாள் கொண்டாட்டம்: பெற்றோர் ஆசையை நிறைவேற்றிய மருத்துவக் குழு!

திருவண்ணாமலை: குடும்பத்தோடு கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வரும் தம்பதியினரது குழந்தையின் முதல் பிறந்த நாள், மருத்துவக் குழுவினரால் கொண்டாடப்பட்ட சம்பவம் காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.

கரோனோ சிகிச்சை பெற்றுவரும் தம்பதியர் மகனின் முதல் பிறந்த நாளைக் கொண்டாடிய மருத்துவ குழுவினர்
கரோனோ சிகிச்சை பெற்றுவரும் தம்பதியர் மகனின் முதல் பிறந்த நாளைக் கொண்டாடிய மருத்துவ குழுவினர்

நாட்டில் தினசரி கரோனா பாதிப்புகள் லட்சங்களில் பதிவாகி வரும் நிலையில், உடலளவில் மட்டுமல்லாது, மனதளவிலும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி, மக்களின் வாழ்வையே கரோனா புரட்டிப் போட்டுள்ளது. இருந்த போதிலும் இந்தக் கரோனா சூழல், ’மனிதனிடம் மனிதம் இல்லை’ என்ற வாதங்களை பொய்யாக்கி, மனித மனங்களிடையேயான பிணைப்பை ஏதோ ஒரு வகையில் வலுப்படுத்தியே வருகிறது.

குறிப்பாக, மருத்துவமனைகள், மருத்துவப் பணியாளர்கள் குறித்து நிலவிவரும் பல்வேறு பொதுக் கருத்துகள் உடைந்து, நோயாளிகளுக்காக கலங்கும், நெகிழ்ச்சியடையும் மருத்துவப் பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் குறித்து சிலாகிக்கும் கரோனாவிலிருந்து மீண்ட நபர்கள் குறித்த சம்பவங்கள் பலவற்றை இந்தக் கரோனா காலத்தில் தொடர்ந்து கண்டு, கேட்டு வருகிறோம். அந்த வகையில் குடும்பத்தோடு கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வரும் தம்பதியரது மகனின் முதல் பிறந்த நாள், மருத்துவக் குழுவினரால் கொண்டாடப்பட்ட சம்பவம் காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் கரோனா சிறப்பு வார்டு அமைக்கப்பட்டு, 100க்கும் மேற்பட்டோர் ஆரம்பக்கட்ட கரோனா சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்களுக்கு, கொம்மனந்தல் வட்டார மருத்துவ அலுவலர் மணிகண்டபிரபு தலைமையிலான மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

குழந்தையுடன் கரோனா பாதிப்புக்குள்ளான தம்பதி

இந்நிலையில், சேத்துப்பட்டை அடுத்த ராஜமாபுரம் கிராமத்தைச் சேர்ந்த இளம் வயது தம்பதியினர் மற்றும் அவர்களது ஆண் குழந்தைக்கு இரண்டு நாள்களுக்கு முன்பு கரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அவர்கள் மூன்று பேரும் சேத்துப்பட்டு தனியார் மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று முன் தினம் (மே.10) காலை வட்டார மருத்துவ அலுவலர் மணிகண்ட பிரபு கரோனா வார்டில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டபோது அந்த இளம் வயது தம்பதியினர் மிகவும் சோகமாகக் காணப்பட்டுள்ளனர்.

இது குறித்து அவர்களிடம் மருத்துவ அலுவலர் விசாரித்தபோது, அன்று தங்களது மகனுக்கு முதல் பிறந்த நாள் என்றும், அவனது பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாடத் திட்டமிட்டிருந்த தாங்கள், திடீரென கரோனா தொற்றுக்கு ஆளாகி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டதாகவும் வேதனைத் தெரிவித்துள்ளனர்.

உதவிய மருத்துவ அலுவலர்

மேலும், தங்களது மகனின் முதல் பிறந்த நாளைக் கொண்டாட முடியாமல் போனது தங்களுக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அப்பெற்றோர் தெரிவித்துள்ளனர். இதைக்கேட்ட மருத்துவ அலுவலர் மணிகண்டபிரபு, அவர்களுக்கு ஆறுதல் கூறிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.

அதனைத் தொடர்ந்து சில மணி நேரங்களில், பிறந்த நாள் கேக், இனிப்புகளுடன் வந்த மருத்துவ அலுவலர், அந்த இளம் தம்பதியிடம் ”உங்களது குழந்தையின் பிறந்த நாளை இங்கேயே கொண்டாடுவதற்கு ஏற்பாடு செய்துள்ளேன்” எனத் தெரிவித்து அவர்களை ஆச்சரியத்திலும் மகிழ்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளார்.

கரோனா வார்டில் மகனின் முதல் பிறந்த நாளைக் கொண்டாடி மகிழ்ந்த தம்பதி

பெருந்தொற்று வார்டில் பிறந்தநாள்

இதைத் தொடர்ந்து, அங்கிருந்த செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவக் குழுவினருடன் இணைந்து அந்தத் தம்பதியினர் தங்களது குழந்தையின் முதல் பிறந்த நாளை கேக் வெட்டி மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். மேலும், பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாட ஏற்பாடு செய்த மருத்துவ அலுவலருக்கு தங்கள் மனதார தம்பதியினர் நன்றி தெரிவித்தனர்.

இச்சம்பவம் சமூக வலைதளத்தில் வைரலாகப் பரவி வரும் நிலையில், பலரது பாராட்டுகளையும் இம்மருத்துவக் குழுவினர் பெற்றுள்ளனர்.

இதையும் படிங்க:’கடும் உழைப்பாளிகளான செவிலியர்களுக்கு நன்றி’ - மோடி வாழ்த்து

ABOUT THE AUTHOR

...view details