திருவண்ணாமலை:கீழ்பெண்ணாத்தூர் தாலுகா அலுவலகத்தில் அதிக சத்தத்துடன் டைல்ஸ் கற்கள் திடீரென வெடித்து பெயர்ந்ததால் நில அதிர்வு ஏற்பட்டதோ என்ற அச்சத்துடன் உள்ளிருந்த ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் பதறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பெண்ணாத்தூரில் கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டடத்தில் தாலுகா அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த கட்டடத்தில் நேற்று (பிப்.22) மாலை அதிக சத்தத்துடன் டைல்ஸ்கள் பெயர்ந்தன. திடீரென டைல்ஸ்கள் பெயர்ந்ததால் அலுவலகத்தில் இருந்த ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் அவசர அவசரமாக கட்டடத்தை விட்டு வெளியேறினார்.
கீழ்பெண்ணாத்தூர் தாலுகா அலுவலகம் முதல் தளத்தில் வட்ட வழங்கல் அலுவலகம், தேர்தல் பிரிவு அலுவலகம், கூட்டரங்கு உள்ளிட்டவை உள்ளன. நேற்று மாலை சுமார் 5 மணி அளவில் கூட்ட அரங்கில் ஏதோ வெடித்தது போன்று அதிகளவு சத்தம் கேட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அரசு ஊழியர்களும் பொதுமக்களும் அச்சத்துடன் தாலுகா அலுவலகத்தில் இருந்து உடனடியாக வெளியேறினர்.