திருவண்ணாமலை: விவசாயிகளின் விளை நிலத்தில் உயர் மின் கோபுரம் அமைக்கும் பவர்கிரீட் நிறுவனத்தைக் கண்டித்தும், விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்கள் கண்டன கோஷங்கள் எழுப்பியபடி தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்திலும், குடியேறும் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இது குறித்து அவர்கள் கூறுகையில், "உயர் மின் கோபுரம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட்டு சாலையோரங்களில் கேபிள் மூலம் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும்.
விவசாயிகளின் நிலங்களில் கான்கிரீட் அமைத்து அமைக்கப்படும் உயர்மின் கோபுரத்திற்கு பவர்கிரீட் நிறுவனம் இழப்பீடு வழங்குவதில் பாரபட்சம் காட்டுகிறது. அனைத்து விவசாயிகளுக்கும் ஒரே மாதிரியான இழப்பீடு வழங்க வேண்டும்.
குறிப்பாக கிணறு, ஆழ்துளைக் கிணறு, அனைத்து வகையான மரங்களுக்கும் ஒரே மாதிரியான இழப்பீடு வழங்குவதை உறுதிசெய்ய வேண்டும். கிணற்றுக்கு ஒரு மீட்டருக்கு ஒரு லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டனர்.