திருவண்ணாமலை: செய்யாறு அடுத்த மேல்மா பகுதியில் சிப்காட் அலகு மூன்று விரிவாக்கத்தைத் தொடங்கிட வலியுறுத்தி தென்னிந்திய கரும்பு விவசாயிகள் சங்கத்தினர், சங்கத் தலைவர் கே.வி.ராஜ்குமார் தலைமையில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மேல்மா கூட்டு சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதாவது, செய்யாறு சிப்காட் விரிவாக்கமாக அலகு மூன்று திட்டத்திற்கு மேல்மா, குறும்பூர், நர்மாப்பள்ளம், காட்டுகுடிசை உள்ளிட்ட 9 கிராமங்களைச் சேர்ந்த பகுதியில் 3 ஆயிரத்து 174 ஏக்கர் பரப்பளவு நிலங்களை தமிழக அரசு கையகப்படுத்த உத்தேசிக்கப்பட்டு, அதில் தற்போது 1,200 ஏக்கர் நிலம் மட்டுமே நில எடுப்பிற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், விவசாய விளை நிலங்களை கையகப்படுத்துவதன் மூலம் தங்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படுவதாக நிலம் கையகப்படுத்துதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து மேல்மா பகுதியில் சிப்காட் விரிவாக்கத்தை கைவிடக்கோரி ஒன்பது கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், தங்களின் கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 125 நாட்களாக காத்திருப்பு சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களின் மூலமாக தங்களின் எதிர்ப்பை தெரிவித்து, போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்று நிபந்தனை ஜாமினில் வெளியே வந்தனர்.