திருவண்ணாமலை:திருவண்ணாமலை மாவட்டத்தின் ஒவ்வொரு கிராமத்திலும் பயிர் அறுவடை சோதனையை வேளாண்மைத் துறை, புள்ளியியல் துறை, வருவாய்த் துறை மற்றும் காப்பீடு நிறுவனம் மேற்கொள்கிறது. அதில் ஒரு ஏக்கருக்கு 25 சதுர மீட்டர் அளவு ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் மகசூல் இழப்பு கண்டறியப்பட்டு, பயிர்க் காப்பீடு வழங்கப்படும். ஆனால், திருவண்ணாமலை மாவட்டத்தில் ரகசியமாகப் பயிர் அறுவடை சோதனை செய்யப்படுவதாகவும், அதன் முடிவுகள் வெளியிடப்படவில்லை எனவும், இதனால் மகசூல் இழப்பு குறித்து விவசாயிகளுக்குத் தெரியவில்லை என்று விவசாய சங்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதன்மூலம் தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் அதிக அளவு லாபம் பெறுவதாகவும், இவர்களது ரகசிய ஆய்வில், 25 சதுர மீட்டருக்கு 4 கிலோ மட்டுமே கிடைத்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. தமிழகத்தில் ஒரு ஏக்கருக்கு சராசரியாக 2 ஆயிரம் கிலோ நெல் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால், திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரு ஏக்கருக்கு 640 கிலோ மட்டும் உற்பத்தியாகிறது.
இதையும் படிங்க: ஜன.1 முதல் 'கள்' இறக்கி சந்தைப்படுத்தும் போராட்டம் - நல்லசாமி அறிவிப்பு
50 சதவீதம் உற்பத்தி இழப்பு இருந்தால், பயிர் காப்பீடு வழங்க வேண்டும். ஆனால், தனியார் காப்பீட்டு நிறுவனம் இழப்பீடு வழங்க மறுக்கிறது. தமிழகத்தில் 2,360 கோடி ரூபாய் காப்பீட்டுத் தொகை வசூலிக்கப்பட்டதில், 560 கோடி ரூபாய் மட்டுமே இழப்பீடாக விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 1,800 கோடி ரூபாய் தனியார் காப்பீட்டு நிறுவனத்துக்கு லாபம் கிடைத்துள்ளது.
எனவே தனியார் காப்பீட்டு நிறுவனம் மூலம் காப்பீடு தொகை வசூல் செய்வதை ரத்து செய்துவிட்டு, அரசு காப்பீட்டு நிறுவனங்கள் மூலம் விவசாயிகளிடம் இருந்து காப்பீடு தொகை வசூலிக்க வேண்டும் என விவசாய சங்கத்தினர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தி கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்ட கட்சி சார்பற்ற விவசாயி சங்கத்தினர், திருவண்ணாமலையில் வேளாண்மைத் துறை, புள்ளியியல் துறை, வருவாய்த் துறை ஆகிய துறைகள் இணைந்து சோதனை நடத்தவில்லை என்றும், தனியார் காப்பீடு நிறுவனம் மட்டும் ரகசியமாக ஆய்வு மேற்கொண்டு அதிக அளவு இலாபம் ஈட்டி வருவதாகவும், இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
இதையும் படிங்க: உடலுக்கு அரசு மரியாதை என அறிவித்தப் பின்னர் 1,652 பேர் உடல் உறுப்பு தானம் செய்ய பதிவு - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்