திருவண்ணாமலை:நீர் பிடிப்பு பகுதிகள், நீர்நிலைகள், நீர் வழித்தடங்களை உள்ள ஆக்கிரமிப்புகளை ஆரம்ப நிலையிலேயே தடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து தமிழ்நாடு அரசு மாநிலம் முழுவதும் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றி வரும் பணிகளை மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்து அன்மருதை கிராமத்தில், சர்வே எண் 289/2, சுமார் இரண்டு ஏக்கர் பரப்பளவில் கண்ணங் குட்டை என்னும் ஒரு குட்டை ஒன்று இருந்துள்ளது. இந்த கண்ணங் குட்டை அன்மருதை கிராம மக்களின் கால்நடைகளுக்கு நீர் ஆதாரமாகவும், நிலத்தடி நீர் ஆதாரமாகவும் இருந்து வந்துள்ளது.
மேலும், மழைக் காலங்களின் போது கிராமத்திற்குள் மழை நீர் தேங்காதவாறு பாதுகாத்து வந்த, இந்த கண்ணங் குட்டையை அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களின் துணையோடு, தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்து உள்ளதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இது குறித்து அக்கிராமத்தின் விவசாயிகள் கூறுகையில், “அன்மருதை கிராம மக்களின் நீராதாரமாக விளங்கி வந்த கண்ணங் குட்டையை, நரியம்பாடியைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவர் தன்னுடைய சுய லாபத்திற்காகக் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் ஆக்கிரமித்துள்ளார். இதனால் குட்டையாக இருந்த பகுதி தற்போது விவசாய நிலமாக மாறிவிட்டது.
இதனால் மழைக் காலங்களில் மழை நீர் வடிவதற்கு வழியில்லாமல் கிராமத்தில் மழை நீர் சூழ்ந்து மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனிப்பிரிவு, மாவட்ட ஆட்சியர், கோட்டாட்சியர், சேத்துப்பட்டு வட்டாட்சியர், பெரணமல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர், வருவாய் ஆய்வாளர் ஆகியோர்களிடம் மனு மேல் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.
மாறாகக் கொடுக்கும் மனுக்களை அதிகாரிகள் குப்பைத் தொட்டியில் போடுகின்றனர். இதற்கிடையில் முதலமைச்சரின் தனிப்பிரிவில் இருந்து ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் எனப் பதில் மனு வந்தது. ஆனால் 60 நாட்களுக்கு மேல் ஆகியும் இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது குறித்து அரசு அதிகாரிகள் தனிக் கவனம் செலுத்தி கண்ணங் குட்டையை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லை எனில் அடுத்த கட்டமாகப் போராட்டம் நடத்தப்படும்” எனத் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:மாநில எல்லையில் மாவோயிஸ்ட்டுகள் ஊடுருவலா? ஐஜி பவானீஸ்வரி முக்கிய தகவல்..