திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அடுத்த குன்னத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சம்பத் என்பவர், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். அவரை காவல் துறையினர் தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு நிலவியது.
போளூர் அடுத்த குன்னத்தூரில் வசித்து வரும் சம்பத், கடந்த மாதம் தனது வீட்டிற்கு முன்பு, கழிவுநீர் கால்வாயை சரி செய்யக்கோரி ஊராட்சிமன்றத் தலைவர் ஜான்சிராணி என்பவரிடம் பலமுறை முறையிட்டுள்ளார். ஆனால், அவர் அதனைக் கண்டுகொள்ளவில்லை என்று தெரிகிறது.
தற்கொலைக்கு முயன்ற விவசாயி சம்பத் மேலும், ஊராட்சிக்குச் சொந்தமான இடத்தில் ரியல் எஸ்டேட் உரிமையாளர் பாதை அமைப்பதற்காக ரூ.30 லட்சம் கையூட்டு பெற்று ஊராட்சியில் தீர்மானம் போட்டதை சம்பத் கேள்வி கேட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், சம்பத் மீது 10 பேர் கொண்ட கும்பல் கொலை வெறித் தாக்குதல் நடத்தி சம்பத்துக்குச் சொந்தமான நிலத்தில் உள்ள மின்மோட்டார் ஆகியவற்றைத் திருடிச்சென்று, தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
பெண் ஊராட்சி மன்றத் தலைவர்களின் செயல்பாட்டில், அவரது கணவர்கள் எந்தவித குறுக்கீடும் செய்யக்கூடாது என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், மங்கலம் காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்து வரும் ஜான்சி ராணியின் கணவர் குமார், நிழல் ஊராட்சி மன்றத் தலைவராக செயல்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
தற்கொலைக்கு முயன்ற விவசாயி சம்பத் இதுகுறித்து கடந்த மாதம் சம்பத் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு தனித்தனியாக புகார் மனு அளித்துள்ளார். புகார் மனுவிற்கு எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படாததாலும், ஜான்சிராணி- குமார் தரப்பிலிருந்து தொடர்ச்சியாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வந்ததாலும் மன உளைச்சல் அடைந்த சம்பத் இன்று (ஆகஸ்ட் 23) மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயற்சி செய்தார்.
இனியாவது மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தனது புகாருக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தும் சம்பத்; சாத்தான்குளத்தில் தந்தை, மகன் காவல் நிலையத்தில் அடித்துக் கொலை செய்ததைப் போல், தன்னையும் தனது மனைவியையும் காவல் நிலையத்தில் வைத்துக் கொலை செய்துவிடுவேன் என்று காவலர் குமார் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருவதாகத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:மக்களுக்காக 20,000 முகக்கவசங்கள் தயாரிக்கும் ஊராட்சி மன்றத் தலைவர்