திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலத்தில் கீழ் கரிப்பூர் கிராமத்தைச் சேர்ந்த குபேந்திரன்(48), விவசாயம் செய்து வந்தார். இவர் கடந்த ஜனவரி 20ஆம் தேதி, இரவு நேரத்தில் தனது விவசாய நிலத்திற்கு சென்று வருவதாக மனைவியிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். பின்னர் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு குபேந்திரன் வரவில்லை. இதையடுத்து, அவருடைய உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி அலைந்துள்ளனர். இதுதொடர்பாக வேட்டவலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின்பேரில் உதவி ஆய்வாளர் விஸ்வநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், மாயமான குபேந்திரன் கைப்பேசியிலிருந்து அவரது மூத்த மகன் ராஜேஷ் கண்ணாவின் செல்ஃபோனுக்கு அழைப்பு வந்துள்ளது. அதில் பேசியவர்கள், உன் தந்தையை நாங்கள் கடத்தி வைத்துள்ளோம் அவரை விடுவிக்க 20 லட்சம் ரூபாய் பணம் எடுத்துக்கொண்டு வெறையூரில் குறிப்பிட்ட இடத்திற்கு கொண்டு வா எனத் தெரிவித்தனர்.
கடத்தல்காரர்கள் சொன்னதுபோலவே 20 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு காவல் துறைக்கு தகவல் கொடுத்துவிட்டு வெறையூர் பகுதிக்கு உறவினர்கள் சென்றுள்ளனர். அப்போது, மீண்டும் கடத்தல்காரர்களிடமிருந்து அழைப்பு வந்துள்ளது. அப்போது அங்கிருந்து விழுப்புரத்திற்கு வரச்சொல்லி அழைப்பை துண்டித்துள்ளனர். பணத்துடன் ராஜேஷ் கண்ணா விழுப்புரம் சென்றுள்ளார். அப்போது, பணத்தை வாங்க வந்த முகமூடி அணிந்து வந்த மூன்று பேரை, காவல் துறையினர் சுற்றிவளைத்து பிடித்தனர்.