தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அண்ணாமலையார் கோயில் பெயரில் மோசடி - போலி தீப மை விற்பனை - Dheepa mai issue

அண்ணாமலையார் கோயிலில் ஏற்பட்ட தீபத்தில் இருந்து எடுக்கப்பட்ட மை விற்கப்படுவதாக சமூக வலைதளங்களில் போலியாக விளம்பரம் செய்து மோசடி செய்து வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Jan 6, 2023, 10:42 PM IST

திருவண்ணாமலைஅண்ணாமலையார் கோயிலின் திருக்கார்த்திகை தீபத் திருவிழா கடந்தாண்டு டிசம்பர் மாதம் 6ஆம் தேதி கோயிலின் பின்புறம் உள்ள 2668 அடி உயரமுள்ள மலையின் மீது மகா தீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து 11 நாட்கள் எரிந்து டிசம்பர் 16ஆம் தேதி மலை மீது இருந்து மகா தீப கொப்பரை கோயில் ஊழியர்களால் சுமந்தவாறு அண்ணாமலையார் கோயிலுக்கு கொண்டுவரப்பட்டது.

அண்ணாமலையார் கோயிலுக்கு கொண்டுவரப்பட்ட தீப கொப்பரைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கொப்பரையிலிருந்து நெய் சேகரிக்கப்பட்டு, அதனுடன் பல்வேறு மூலிகைகள் மற்றும் வாசனை திரவியங்கள் கலந்து தீப மையானது தயார் செய்யப்பட்டது. ஆருத்ரா தரிசனமான இன்று அண்ணாமலையார் கோயிலில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் சிவகாமி சமேத நடராஜ பெருமான் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்.

தீப மையானது ஆருத்ரா தரிசன தினமான இன்று நடராஜ பெருமானுக்கு நெற்றியில் திலகமிட்ட பின்னர், நெய் காணிக்கை செலுத்திய பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக தீப மையானது விரைவில் பக்தர்களுக்கு வழங்க உள்ள நிலையில் அதற்குள்ளாகவே ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் மர்ம நபர்கள் அண்ணாமலையார் கோயில் பெயரில் போலியான கணக்குகள் உருவாக்கி, தீப மை வேண்டுமென்றால் இன்பாக்ஸில் தகவல் தெரிவிக்கவும் என தீப மை புகைப்படத்துடன் பதிவிட்டு வருகின்றனர்.

இது தொடர்பாக கோயில் இணையாணையர் அசோக்குமாரை தொடர்பு கொண்டபோது, அவர் தொலைபேசியை எடுக்கவில்லை என்பதும்; தொடர்ந்து இதுபோன்ற தொலைபேசி எடுக்காமல் இருப்பதும் வாடிக்கையான பழக்கமாக கொண்டுள்ளார் எனவும் பொதுமக்களிடையே கருத்து நிலவி வருகிறது.

இது குறித்து அலுவலரிடம் விசாரித்தபோது, இந்த சமூக வலைதளத்திற்கும் கோவில் நிர்வாகத்திற்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை என்றும், மர்ம நபர்கள் யாரோ பணம் சம்பாதிக்கும் நோக்கில் இதுபோன்று போலியான கணக்குகளை உருவாக்கியுள்ளதாகவும் கோயில் நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

மேலும் சமூக வலைதளங்களில் பரப்பப்படும் இது போன்ற தகவல்களை பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் யாரும் நம்ப வேண்டாம் என்றும், அண்ணாமலையாரின் பிரசாதமான தீப மை பக்தர்களுக்கு வேண்டுமென்றால் நேரடியாக கோயிலுக்கு வந்து பத்து ரூபாய் கட்டணம் செலுத்தி வாங்கிக் கொள்ளலாம் எனவும் கோயில் நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணாமலையார் கோயில் பெயரில் போலியான கணக்கை உருவாக்கி பக்தர்களிடமும் பொதுமக்களிடமும் பணத்தை கொள்ளையடிக்கும் நபர்கள் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

இதையும் படிங்க:கூலித் தொழிலாளிக்கு ரூ.1.39 கோடி ஜி.எஸ்.டி. வரி விதிப்பு - நூதன மோசடியில் சிக்கிய பரிதாபம்...

ABOUT THE AUTHOR

...view details