திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் ஒன்றியத்தில் மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் போட்டியிடும், கலசபாக்கம் ஊராட்சி ஒன்றிய குழு, மாவட்ட ஊராட்சி குழு வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரைப் பொதுக்கூட்டம் தென்மகா தேவமங்கலம் கலைஞர் திடலில் நடைபெற்றது.
இந்த பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், திருவண்ணாமலை சட்டமன்ற உறுப்பினருமான எ.வ. வேலு கலந்துகொண்டு தேர்தலில் போட்டியிடும் 21 வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், ‘இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக பதவி வகித்த, முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி பஞ்சாயத்துராஜ் என்ற சட்டத்தை இயற்றினார். இந்த சட்டத்தினால், கிராமங்களில் வசிக்கும் ஆண்கள், பெண்களை மோர், காப்பி போட்டு கொடுப்பதற்கு பயன்படுத்தி வந்த நிலையை மாற்றி, பெண்களை முதன்முதலில் பதவி நாற்காலியில் அமர வைக்க உதவியது. இதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் முன்னாள் திமுக தலைவர் கலைஞர் கருணாநிதிதான்’ என்றார்.