திருவண்ணாமலை:திருவண்ணாமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட காட்டாம்பூண்டி ஊராட்சியில் அரசு மூலம் கட்டப்பட்ட கட்டடங்கள் திறப்பு விழா மற்றும் ஒரு கோடியே 24 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா நிகழ்ச்சியில் வருவாய்த்துறை, வேளாண்மை துறை, கூட்டுறவு துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சார்பில் 377 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பங்கேற்று, நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் உரையாற்றிய பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, "தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், எதிர்கட்சி, ஆளும் கட்சி என்று வேறுபடுத்தி பார்க்காமல், பகைவர்களுக்கும் அருளுகின்ற பண்பாடு எப்படி வள்ளலாருக்கு இருந்ததோ, அந்த எண்ணத்தோடு வள்ளலாராக தமிழ்நாடு முழுவதும் எதிர்கட்சி உறுப்பினர்கள் தொகுதி மற்றும் ஊராட்சிகளில் கூட வளர்ச்சிப் பணிகளுக்காக பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் செயல்படுகின்ற இந்த அரசில் செய்ய வேண்டிய பணிகளை, அமைச்சர்களாகிய நாங்கள் சிறப்பாக செய்து கொண்டு இருக்கிறோம். அதன் மூலமாக பல திட்டங்கள் இந்த ஊராட்சியில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி சொல்ல வேண்டும்” என கூறினார்.