திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த மாலையிட்டான் குப்பம் கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி மூர்த்தி, இவரது மனைவி மாரியம்மாள். சரண்யா, பூங்கொடி, தயாநிதி மாறன் ஆகிய மூன்று பிள்ளைகளுடன் தம்பதியினர் அதே கிராமத்தில் பல ஆண்டுகளாக குடிசை வீட்டில் வசித்து வருகின்றனர்.
இதில், கண் பார்வை குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளியான சரண்யா, வந்தவாசி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 404 மதிப்பெண் பெற்றார்.
கரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கை காரணமாக, கல்லூரிகளில் சேர்வதற்கு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்கின்ற நடைமுறையை அரசு முதன்முறையாக அமல்படுத்தியுள்ளது. சரண்யா குக்கிராமத்தைச் சேர்ந்தவர் என்பதால், இதுகுறித்த தகவல் அவருக்குத் தெரியவில்லை.
இந்நிலையில், அவர் கல்லூரியில் சேர்வதற்காக சென்று விசாரித்துள்ளார். அப்போது ஆசிரியர்கள் கல்லூரிக்கு விண்ணப்பம் ஆன்லைனில் மட்டுமே ஆகஸ்ட் 10ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்கவேண்டும் என்று கூறியுள்ளனர்.
வறுமை காரணமாக மேல் படிப்புக்கு கல்லூரியில் செல்வதற்காக தமிழ்நாடு அரசின் உதவியை சரண்யா எதிர்பார்த்து காத்திருந்தார். மாணவியை நிலை குறித்து நமது ஈடிவி பாரத் ஊடகத்தில் ஆகஸ்ட் 17ஆம் தேதி செய்தி வெளியானது. அப்பகுதி மக்களும் மாணவி கல்லூரி படிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தனர்.
கல்லூரியில் சேர்வதற்கான படிவத்தை மாணவியிடம் வழங்கிய மாவட்ட ஆட்சியர் கந்தசாமி இந்நிலையில், மாணவியின் நிலை அறிந்த மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, வந்தவாசிக்கு வருகை தந்து மாணவி சரண்யாவை நேரில் அழைத்து சென்று வந்தவாசி அருகே உள்ள அகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரி நிர்வாகத்திடம் பரிந்துரை செய்து மாணவி பி.காம் படிப்பதற்கு ஏற்பாடு செய்துள்ளார். கல்லூரியில் சேர்வதற்கான படிவத்தையும், கல்வி உதவி தொகையாக ரூ.20 ஆயிரத்திற்கான காசோலையையும் மாணவியிடம் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
இதையும் படிங்க:மாற்றுத்திறனாளி மாணவிக்கு கல்வி கிடைக்குமா?