திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த மாலையிட்டான்குப்பம் என்ற குக்கிராமத்தைச் சேர்ந்தவர், மாற்றுத்திறனாளி மாணவி சரண்யா. இவர் தற்போது நடந்து முடிந்த 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 404 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.
கரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கை காரணமாக, கல்லூரிகளில் சேர்வதற்கு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்கின்ற நடைமுறையை அரசு முதன்முறையாக அமல்படுத்தியுள்ளது. சரண்யா குக்கிராமத்தைச் சேர்ந்தவர் என்பதால், இதுகுறித்த தகவல் அவருக்குத் தெரியவில்லை.
இந்நிலையில் அவர் கல்லூரியில் சேர்வதற்காக சென்று விசாரித்துள்ளார். அப்போது ஆசிரியர்கள் கல்லூரிக்கு விண்ணப்பம் ஆன்லைனில் மட்டுமே ஆகஸ்ட் 10ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்கவேண்டும் என்று கூறியுள்ளனர்.
தற்போது சரண்யாவுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் கடைசி தேதி முடிந்துபோயுள்ளது. இதனிடையே மாற்றுத்திறனாளி மாணவியின் கல்லூரி கனவு தடைபடக் கூடாது எனவும்; அவர் எதிர்பார்க்கும் கல்லூரியில் விரும்பிய பாடப் பிரிவில் சேர்வதற்கு உரிய நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: அலைபேசியும் இல்ல, நெட்வொர்க்கும் இல்ல' - பழங்குடியின குழந்தைகளுக்கு எட்டாக் கனியாகும் ஆன்லைன் கல்வி