திருவண்ணாமலை: தற்காலிக மின் இணைப்பு வழங்குவதற்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம் பெற்ற மின்வாரிய போர்மேன் ரேணு என்பவரை திருவண்ணாமலை விஜிலென்ஸ் டிஎஸ்பி திருவேல் முருகன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று (பிப்.20) அதிரடியாக கைது செய்தனர்.
திருவண்ணாமலை வேங்கிக்கால், தென்றல் நகர் பகுதியை சேர்ந்தவர் வரதன் என்பவர் சென்னையில் தனியார் ஓட்டலில் சப்ளையராக வேலை செய்து வருகிறார். இவர், மனைவி சுதாவின் பெயரில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக திருவண்ணாமலை மாவட்டம், மேலத்திக்கான் கிராமத்தில் அருணாச்சலம் நகரில் 1,200 சதுர அடியில் வீட்டுமனை வாங்கி இருந்தார். சொந்தமாக வீடு கட்டுவதற்காக தற்காலிக மின் இணைப்பு கடந்த மாதம் 30ஆம் தேதி இ-சேவை மூலம் பதிவு செய்து அதற்கு உண்டான கட்டணம் ரூ.586-ஐ ஆன்லைனில் செலுத்தி உள்ளார்.
பின்னர் கடந்த 10ஆம் தேதி போர்மேன் ரேணு என்பவர் வீட்டில் தற்காலிக மின்சார மீட்டரை மின் வாரிய ஊழியர்கள் பொருத்தியுள்ளனர். அப்போது போர்மேன் ரேணு என்பவர் தற்காலிக மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் கொடுக்க வேண்டும் என்று கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு வரதன், தான் ஹோட்டலில் சப்ளையராக பணியாற்றுவதாகவும், எனவே தன்னால் அவ்வளவு தொகை தர முடியாது என்றும் கூறியுள்ளார்.