ஊரடங்கு உத்தரவு காரணமாக அனைத்து மதுபானக் கடைகளும் மூடப்பட்டுள்ளதால் பல்வேறு இடங்களில் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சுவது அதிகரித்து வருகிறது. அந்த வகையில், திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமுத்தூர் மலைப் பகுதிகளில் அதிக அளவில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்திக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து, ஆள் நடமாட்டம் இல்லாத மலைப்பகுதிகளில் ட்ரோன் கேமராக்கள் மூலம் சாராய ஊறல்கள் போடப்பட்டிருக்கும் இடத்தை கண்காணித்து, நேரடியாக சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர், ஊறல்களை அழித்தும், சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சிய நபர்களையும் கைது செய்தனர்.
இதனைத்தொடர்ந்து, திருவண்ணாமலை மாவட்ட அனைத்து உள்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையில் மதுவிலக்கு மற்றும் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர்கள், உதவி காவல் ஆய்வாளர்கள், காவலர்கள் மற்றும் மாவட்ட டெல்டா குழுவினர்கள் இணைந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நாளிலிருந்து ஏப்ரல் 26ஆம் தேதிவரை மதுவிலக்கு சோதனை நடத்தினர்.