திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூரை அடுத்த கொளத்தூர் கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மூன்று பேர் குடிபோதையுடன் சிகிச்சைக்கு சென்றுள்ளனர்.
முகக்கவசம் அணியாமல் மருத்துவமனைக்குள் சென்ற அவர்களிடம், அங்கு பணிபுரிந்து வரும் செவிலியர் சகாயமேரி என்பவர், ”அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும்” என்று கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து ஆத்திரமடைந்த அம்மூவரும், ”எங்களைக் கேள்வி கேட்பதற்கு நீங்கள் யார்?” என்று கூறி அவரது கன்னத்தில் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதில் அச்செவிலியருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
மேலும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்த நாற்காலி, மேசை, கண்ணாடிகள் உள்ளிட்ட பொருள்களையும் அவர்கள் அடித்து நொறுக்கி சேதப்படுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இச்சம்பவத்தை சக மருத்துவமனை ஊழியர்கள் படம்பிடித்து காவல் நிலையத்திற்கு அனுப்பியதன் அடிப்படையில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எஸ்.அரவிந்த் அந்நபர்களைக் கண்டறிந்து கைது செய்யுமாறு உத்தரவிட்டார்.
அதன்பேரில் கீழ்பெண்ணாத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் மகாலட்சுமி, காவல் துறையினர் ஆகியோர் சம்பந்தப்பட்ட காணொலியில் இருந்த நபர்களைத் தேடிவந்தனர். தொடர்ந்து, இச்சம்பவத்தில் ஈடுபட்ட கொளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த விக்ரம் என்பவரை நேற்று (ஆக.25) கைது செய்தனர்.