திருவண்ணாமலை:தெற்கு மாவட்ட அதிமுக மாவட்டச் செயலாளர் அலுவலகத்தில் திருவண்ணாமலை அதிமுக தெற்கு மண்டலத்துக்கு உட்பட்ட 480 அண்ணா தொழிற்சங்கப் பேரவை நிர்வாகிகளுக்கு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உருவம் பதித்த கைக்கடிகாரம் வழங்கும் நிகழ்வு நேற்று (ஜூலை 7) நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் அண்ணா தொழிற்சங்கப் பேரவையின் மாநிலச் செயலாளர் ஆர்.கமலக்கண்ணன், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர், முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பங்கேற்று திருவண்ணாமலை தெற்கு மண்டலத்திற்கு உட்பட்ட 480 அண்ணா பேரவை தொழிற்சங்க நிர்வாகிகளுக்கு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் உருவம் பதித்த கைகடிகாரங்களை வழங்கினர்.
பின்னர் கமலக்கண்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “திமுக அரசு 530 தனியார் பேருந்து ஓட்டுநர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க அறிவித்தவுடன் திமுக தொழிற்சங்கம் மற்றும் அதன் 8 கூட்டணி சங்கங்கள் இணைந்து 5 மணி நேரம் போராட்டம் நடத்துவதாக கூறி வேலை நிறுத்தம் என்ற நாடகத்தை நடத்தி விட்டுச் சென்றனர். ஒரு மணி நேரத்தில் இந்த அறிவிப்பும் திரும்பப் பெறப்பட்டது. இதற்கு அதிமுக மற்றும் தோழமை சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தது.
ஆனால், தற்போது ஒப்பந்த அடிப்படையில் கடந்த இரண்டு நாட்களில் 430 தனியார் ஓட்டுநர்களை நியமித்து உள்ளது. இதற்கு திமுக மற்றும் அதன் தோழமை தொழிற்சங்கங்கள் எந்த ஒரு எதிர்ப்பையும் காட்டவில்லை. அரசு தரப்பிடம் இருந்து தொழிற்சங்கங்களுக்கு பல விதத்தில் செட்டில் செய்ய உள்ளதாகவும், இதனை எதிர்த்து அண்ணா திமுக தொழிற்சங்கம் மிக விரைவில் தொழிலாளர் நலன்களுக்காக மிகப்பெரிய போராட்டத்தை நடத்தும்” என்றும் கமலக்கண்ணன் தெரிவித்தார்.