திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒழுங்குமுறை விற்பனை வளாகம், ஆரணி தச்சூர் பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரி ஆகிய இரண்டு மையங்களில் வாக்கு எண்ணும் மையம் அமைந்துள்ளது.
இங்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வலுவான அறை (Strong Room), சிசிடிவி கேமரா கட்டுப்பாட்டு அறை, வாக்கு எண்ணும் அறை உள்ளிட்ட அனைத்துப் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்டத் தேர்தல் அலுவலர் சந்தீப் நந்தூரி நேரில் பார்வையிட்டு ஆய்வுமேற்கொண்டார்.
ஆய்வின்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ. அரவிந்த், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துகுமரசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.
வாக்குப்பதிவு முடிந்த நிலையில் வாக்குச்சாவடிகளிலிருந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் திருவண்ணாமலை ஒழுங்குமுறை விற்பனைக் குழு வளாக வாக்கு எண்ணும் மையத்தில் செங்கம் (தனி), திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர், கலசப்பாக்கம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும், ஆரணி தச்சூர் பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் போளுர், ஆரணி, செய்யாறு, வந்தவாசி (தனி) ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு எந்திரங்களும் தனித்தனி வலுவான அறைகளில் வைக்கப்பட்டுள்ளன.
திருவண்ணாமலை மாவட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இரண்டு வாக்கு எண்ணும் மையங்களில் மூன்று அடுக்கு பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.
வாக்கு எண்ணும் மையத்தில் மத்திய துணை ராணுவப் படையினர் முதல் அடுக்கு பாதுகாப்பு வளையத்திலும், தமிழ்நாடு சிறப்புக் காவல் படையினர் இரண்டாவது அடுக்குப் பாதுகாப்பு வளையத்திலும், வாக்கு எண்ணும் மையம் வளாகத்தில் உள்ளூர் காவலர்களும் பாதுகாப்புப் பணியில் 24 மணி நேரமும் ஈடுபட்டுவருகிறார்கள்.
இதையும் படிங்க:சிறப்பு ரயில்கள் கூடுதல் பெட்டிகளுடன் இயக்கப்படும் - தென்னக ரயில்வே