திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அமைந்துள்ள அடி அண்ணாமலை கிராமத்தில், மாணிக்கவாசகர் கோவில் உள்ளது. இங்குதான் மாணிக்கவாசகர் திருவெம்பாவை அருளியதாகக் கருதப்படுகிறது. இந்நிலையில், திருவண்ணாமலை மரபுசார் அமைப்பின் தலைவரும், வரலாற்று ஆர்வலருமான ராஜ் பன்னீர் செல்வம் மற்றும் குழுவினர், இக்கோவிலின் கிழக்குப்புற மதில் சுவற்றின் கீழே, இதுவரை பதிவு செய்யப்படாத கல்வெட்டு ஒன்றைக் கண்டறிந்தனர்.
அதில், விக்கிரம சோழத்தேவர் என்பாரும், சேதி மண்டலத்து நாட்டார் சபையும் சேர்ந்து நெல்வாய் என்ற ஊரில் உள்ள நிலத்தை, இறையிலி (வரி நீக்கிய) நிலமாக அறிவித்து, அதில் ஒருபாதியை இக்கோவிலில் உள்ள திருப்பெருந்துறை உடைய நாயனார்க்கும், மற்றொருபாதியை திருவாதவூர் நாயனார்க்கும் தானமாக வழங்கிய செய்தியை அறியமுடிகிறது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவிலில் உள்ள இறைவனை திருப்பெருந்துறை உடைய நாயனார் என்றும், மாணிக்கவாசகரை திருவாதவூர் நாயனார் என்றும் அழைப்பர். இக்கல்வெட்டில் குறிக்கப்படும் விக்கிரம சோழத்தேவர் என்பவர், இரண்டாம் சடையவர்மன் குலசேகரனின் உயர் அதிகாரியாக பணியாற்றியதை, அண்ணாமலையார் கோவிலில் உள்ள முதலாம் சடையவர்மன் விக்கிரம பாண்டியனின் (1241-1250) இரண்டாம் ஆட்சியாண்டு கல்வெட்டு (கி.பி 1243) மூலம் அறியமுடிகிறது.