தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தஞ்சை பெரிய கோயிலின் ஓவியத்துடன் ஒத்துள்ள தி.மலையின் வேட்டை நாய் நடுகல்! - திருவண்ணாமலை மாவட்டச் செய்திகள்

தானிப்பாடி அருகே உள்ள வேளூரில் வேட்டை நாய்க்கு வைத்த நடுகல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 1000 ஆண்டுகள் பழமைவாய்ந்த இது தஞ்சை பெரிய கோயில் ஓவியத்தில் உள்ள நாயின் உருவத்துடன் ஒத்துள்ளது கவனிக்கப்பட வேண்டிய அம்சமாகும்.

Discovered the Nadugal in Thiruvannamalai
Discovered the Nadugal in Thiruvannamalai

By

Published : Aug 5, 2021, 9:07 AM IST

Updated : Aug 5, 2021, 9:23 AM IST

திருவண்ணாமலை:மாவட்டத்திற்குள்பட்ட தென்பெண்ணை ஆற்றங்கரைகளில் நூற்றுக்கணக்கான தொல்லியல் எச்சங்கள் நமக்கு கிடைக்கின்றன. அது போலத்தான் சற்றும் எதிர்பாராமல் கிடைத்த பொக்கிஷம்தான் தானிப்பாடி அருகே உள்ள வேளூரில் கிடைத்த வேட்டை நாய்க்கு வைத்த நடுகல்.

திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தால் மேற்கொள்ளப்பட்ட தொடர் பராமரிப்புப் பணியின்போது தா. வேளூர் பாம்பாற்றுப் படுகையில் அமைந்துள்ள வேடியப்பன் கோயிலில் உள்ள நடுகற்கள் அருகே இருந்த மேட்டுப்பகுதியைச் சரிசெய்யும்போது தட்டுப்பட்ட கல்லை எடுத்து வைத்துப் பார்த்தபோது முகமற்ற நாயின் உருவம் தெரிந்தது.

நன்றியுள்ள நாய்க்கு நடுகல்

இது என்ன அரிதான ஒரு சிற்பமாக இருக்கிறேதே என்று அருகில் மேலும் ஆய்வுசெய்யும்போது மற்றொரு கல்லில் நாயின் தலையும் எதிரே பன்றியின் உருவமும் கொண்ட கல்லும் கிடைத்தது. இரண்டையும் ஒட்டவைத்துப் பார்த்ததில் முழுஉருவம் தெரியவந்தது.

இதுபற்றி மேலும் ஆய்வு செய்கையில் இதேபோன்று உருவமுள்ள சில நடுகற்கள் கர்நாடக பகுதியில் கிடைத்துள்ளது. தமிழ்நாட்டிலும் ஏற்கெனவே நாய்க்கு வைத்த நடுகற்கள் கிடைத்துள்ளன. ஆனாலும் இதுபோன்று நாய் பன்றியுடன் சண்டையிட்டு இறந்ததின் நினைவாக வைக்கப்பட்ட நடுகல் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இந்த நாயின் உருவம் நல்ல வேட்டை நாய்க்கு உண்டான உடல் வாகுடன் உள்ளது.

பயிரை உண்டு அழிக்கவந்த காட்டுப்பன்றியுடன் சண்டை செய்யும்போதோ அல்லது தனது எஜமானுடன் வேட்டைக்குச் செல்லும்போதோ காட்டுப்பன்றியுடன் சண்டையிட்டு நாய் இறந்துள்ளது. இந்த நன்றியுள்ள நாய்க்கு அப்போதே நடுகல்லும் வைத்துள்ளனர். ஆனால் காலப்போக்கில் அது உடைந்து பூமிக்குள் சென்றுள்ளது.

1000 ஆண்டுகளும், தஞ்சை பெரிய கோயிலும்

நல்வாய்ப்பாக நமது கூட்டு முயற்சியால் அந்த நடுகல் வெளிவந்து தற்போது சரிசெய்து வைக்கப்பட்டுள்ளது. இந்த நடுகல்லின் சிற்ப அமைதியை நோக்கும்போது இது சுமார் 1000 ஆண்டுகள் பழமையானவை என்று அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். மேலும் இத்துடன் தஞ்சை பெரிய கோயில் ஓவியத்தில் உள்ள நாய் உருவத்துடனும் இது ஒத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: உங்கள் இல்லம் நாடி வருகிறது 'மக்களை தேடி மருத்துவம்' - ஸ்டாலின் தொடங்கிவைப்பு

Last Updated : Aug 5, 2021, 9:23 AM IST

ABOUT THE AUTHOR

...view details