திருவண்ணாமலை: கார்த்திகை தீபத் திருவிழா வருகின்ற டிசம்பர் 6ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அண்ணாமலையார் கோயில் மற்றும் கிரிவலப் பாதை உள்ளிட்ட பல்வேறு இடங்களில், ஆன்மீக பக்தர்களின் பாதுகாப்பு குறித்து டிஜிபி சைலேந்திரபாபு பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டார்.
முன்னதாக கோயிலுக்குள் வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு வழங்குவது குறித்தும், பக்தர்கள் சிரமமின்றி நிறைவாக சாமி தரிசனம் செய்ய உள்ள வரிசை, பக்தர்கள் அமரும் இடம், வி.ஐ.பிக்கள் அமருமிடம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் கோயில் வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “கடந்த இரண்டு ஆண்டுகளாக கோயில் பெருந்தொற்றால் வழக்கமான திருவிழாக்கள் நடைபெறாத நிலையில் இந்த ஆண்டு 30 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. திருவண்ணாமலை நகரத்திற்குள் உள்ளே வரும் 4 முக்கிய சாலைகளில் காவல்துறையினர் தொடர்ந்து வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர். 52 இடங்களில் வாகன நிறுத்தம் செய்ய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஐஜி கண்ணன் தலைமையில் 4 டி.ஐ.ஜி, 27 எஸ்.பிக்கள் உள்பட 12 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். பரணி தீபத்தையும், மகா தீபத்தையும் கோயிலுக்குள் காண வரும் பக்தர்களுக்கு இந்த ஆண்டு பார்கோடு வசதியுடன் கூடிய பாஸ் வழங்கப்படவுள்ளது, அதனை ஸ்கேன் செய்த பிறகே உள்ளே அனுமதிக்கப்படுவர்.