அண்ணாமலையார் கோவிலில் பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து தரிசனம் திருவண்ணாமலை :பஞ்ச பூத திருத்தலங்களில் அக்னி தலமாகவும், நினைத்தாலே முக்தியளிக்கும் திருத்தலமாக விளங்குவது திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில். இந்நிலையில், திருக்கார்த்திகை தீபத் திருவிழா கடந்த நவம்பர் 17ஆம் தேதி அண்ணாமலையார் கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்கி, 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெற்றது.
அதில் காலை மற்றும் இரவு வரை சுவாமிகள் பல அலங்காரங்களுடன், பல்வேறு வாகனங்களில் மாட வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாளிக்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிலையில், கடந்த நவம்பர் 26ஆம் தேதி அதிகாலை 4 மணியளவில் அண்ணாமலையார் கருவறையின் முன்பாக பரணி தீபம் ஏற்றப்பட்டு, அன்று மாலை 6 மணியளவில் 2 ஆயிரத்து 668 உயரம் உள்ள மலையின் மீது மகா தீபம் ஏற்றபட்டது.
அன்று ஏற்றப்பட்ட மாகா தீபம் தொடர்ந்து 11 நாட்கள் அண்ணாமலையார் மலையின் மீது ஜோதிச் சுடராக எரிந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கும். அந்த வகையில், இந்த தீப தரிசனத்தைக் காணவும், அண்ணாமலையார் கோயிலில் சாமி தரிசனம் செய்து கிரிவலம் செல்லவும் கடந்த மூன்று நாட்களாக மழையையும் பொருட்படுத்தாது லட்சக்கணக்கான பக்தர்கள் அண்ணாமலையார் கோயிலில் தரிசனம் செய்து வருகிறார்கள்.
மேலும், விடுமுறை தினத்தை ஒட்டி கோயிலுக்கு தரிசனம் செய்வதற்காக வரும் பக்தர்களின் எண்ணிக்கை வார நாட்களை விட மிகுதியாகவே காணப்படுகிறது. அந்த வகையில், நேற்று (டிச. 2) முதல் பக்தர்கள் அதிக அளவில் தரிசனத்திற்காக வந்தபடி உள்ளனர். மேலும், இன்று (டிச. 3) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதலே பல லட்சக்கணக்கான பக்தர்கள் அண்ணாமலையார் கோயிலில் தரிசனம் செய்ய குவிந்து உள்ளனர்.
குறிப்பாக இன்று (டிச. 3) சாமி தரிசனம் செய்ய லட்சக்கணக்கில் பக்தர்கள் கோயிலில் குவிந்துள்ளதால், ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கும் மேலாக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். மாட வீதிகளில் பல மணி நேரம் வரிசையில் காத்திருந்து அண்ணாமலையார் கோயிலுக்குள் பக்தர்கள் தரிசனத்திற்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், பக்தர்களின் வருகை தொடர்ந்து அதிகரித்து வருவதால் காவல்துறையினர் கோயிலில் தடுப்புகளை அமைத்து பக்தர்களை ஒழுங்குப்படுத்தி வருகின்றனர். முன்னதாக இன்று அதிகாலையில் அண்ணாமலையார் கோயிலில் நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேகம் நடைபெற்றது.
இதையும் படிங்க:அச்சுறுத்தும் புயல்: துறைமுகத்தில் 'எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்படுவது யாருக்காக?..அவை எதை உணர்த்துகின்றன?..