உலகம் முழுவதும் 2021 ஆங்கில புத்தாண்டு இன்று (ஜனவரி 1) கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு அண்ணாமலையார் கோயிலில் அதிகாலையில் நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் தரிசனம் - திருவண்ணாமலை அண்ணாமலையார்
திருவண்ணாமலை: அண்ணாமலையார் கோயிலில் ஆங்கில புத்தாண்டையொட்டி பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
அதைத்தொடர்ந்து, சம்மந்த விநாயகருக்கு தங்க கவசமும், உற்சவ மூர்த்திகளான உண்ணாமலையம்மன் சமேத அண்ணாமலையாருக்கு வெள்ளி கவசமும் அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். ஆங்கில புத்தாண்டு விடுமுறை தினமான இன்று அதிகாலையிலேயே கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் கூட்டம் அண்ணாமலையார் கோயிலில் அலைமோதியது. கட்டண தரிசனம், பொது தரிசன வரிசையில் பக்தர்கள் நீண்டநேரம் காத்திருந்து உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையாரை தரிசனம் செய்தனர். மேலும், புத்தாண்டை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.
இதேபோல் திருவண்ணாமலை அண்ணா நுழைவு வாயில் அருகே உள்ள பெருமாள் கோயில், பெரியதெருவில் உள்ள பூதநாராயணன் கோயில், செங்கம் சாலையில் உள்ள காளிம்மன் கோயில், துர்க்கையம்மன் கோயில், காமாட்சியம்மன் கோயில், மாரியம்மன் கோயில், வேலூர் சாலையில் உள்ள பச்சையம்மன் கோயில் உள்ளிட்ட நகரில் உள்ள முக்கிய கோயில்களில் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.
கரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டு ஆங்கில புத்தாண்டையொட்டி திருவண்ணாமலை மாவட்டத்தில் இளைஞர்கள், பொதுமக்கள் பொது இடங்களில் கூட்டம் கூடுவது, சாலையில் கேக் வெட்டி கொண்டாடுவது, இளைஞர்கள் பைக் ரேஸ் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. புத்தாண்டு பண்டிகையையொட்டி திருவண்ணாமலை மாவட்டத்தில் 900 காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.