திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாக்களில் கார்த்திகை மாதம் நடைபெறும் தீபத்திருவிழாவும் , சித்திரை மாதம் நடைபெறும் சித்ரா பவுர்ணமி விழாவும் பிரசித்தி பெற்றது. கார்த்திகை தீபம், சித்ரா பௌர்ணமி நாளில் திருவண்ணாமலையில் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.
அதன்படி இந்தாண்டு சித்ரா பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் வரும் 26ஆம் தேதி திங்கட்கிழமை இரவு 12.16 மணிக்கு தொடங்கி மறுநாள் 27ஆம் தேதி காலை 9.59 மணிக்கு நிறைவடைகிறது.
இந்நிலையில், கரோனா பரவல் காரணமாக சித்ரா பவுர்ணமி அன்று திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு அனுமதி கிடையாது எனவும், பக்தர்கள் யாரும் கிரிவலம் செல்ல வரவேண்டாம் என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு தடை கரோனா தொற்றுப் பரவல் காரணமாக கடந்த ஆண்டும் சித்ரா பவுர்ணமியன்று கிரிவலம் ரத்து செய்யப்பட்டது. அதேபோல் இந்த ஆண்டும் பக்தர்கள் கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கட்டுப்பாடுகளுடன் சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி!