திருவண்ணாமலை:தென்பெண்ணை ஆற்றுடன் செய்யாற்றை இணைத்து 350 கோடி ரூபாய் செலவில் நந்தன் கால்வாய் திட்டம் மிக விரைவில் செயல்படுத்தப்படும் என தமிழ்நாடு சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி தெரிவித்து உள்ளார். மத்திய நீர்வள ஆணையம் சார்பில் அசாதி கி அம்ரித் மகாட்சாவ் 75வது சுதந்திர திருநாள் அமுது பெருவிழா (75th Anniversary of Indian Independence or Azadi Ka Amrit Mahotsav) மற்றும் சாத்தனூர் அணை சுற்றுலா மேம்படுத்தும் விழா ஆகியவை நேற்று நடைபெற்றது.
வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி 75வது சுதந்திர தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுவதையொட்டி ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு அணையை தேர்ந்தெடுத்து நீர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. அந்த வகையில், தமிழ்நாட்டில் திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு பகுதியில் உள்ள சாத்தனூர் அணையை தேர்ந்தெடுத்து நேற்று சாத்தனூர் அணையில், அணை நீரினை பயன்படுத்துவதற்கான மேம்படுத்தப்பட்ட நீர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை, செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி, மத்திய தென்பெண்ணை வடிநில கோட்ட பொறியாளர் சண்முகம் மற்றும் பொதுப்பணித்துறை, நீர்வள ஆதாரத் துறை அதிகாரிகள் என பலர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் சுற்றுலாவை மேம்படுத்தும் பொருட்டு நீர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு பேரணி, கருத்தரங்கம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் ஆகியவை நடைபெற்றது.