கரோனா தொற்றின் தாக்கம் தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தச் சூழலில் கிராமப் பகுதிகளில் இருக்கும் மக்கள், தங்களின் மருத்துவத் தேவைகளை பூர்த்தி செய்ய ஆரம்ப சுகாதார நிலையங்களை நாடிச் செல்கின்றனர்.
இவ்வாறு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மக்களுக்குத் தேவையான மருந்துகள், மருத்துவர்களின் பற்றக்குறை இருப்பதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டி வந்தனர். இதனைப் போக்கும் வகையில், ஆரம்ப சுகாதார நிலையங்களில் தேவையான மருத்துவ வசதிகள் செய்யப்பட்டு இருப்பதை உறுதி செய்யும் வகையிலும், பல்வேறு வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கிராமப்பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத்தலைவர் கு. பிச்சாண்டி ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
ஆரம்ப சுகாதார நிலையங்களை பார்வையிட்ட பிச்சாண்டி அதன்படி இன்று (மே.22) திருவண்ணாமலை மாவட்டம், துரிஞ்சாபுரம் ஒன்றியத்திற்கு உள்பட்ட ஆனந்தல், சொரகுளத்தூர், நார்த்தாம்பூண்டி உள்ளிட்ட கிராமங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி ஆய்வு மேற்கொண்டார். அப்போது மருத்துவமனையில் போதிய மருத்துவ உபகரணங்கள், மருந்துகள் இருப்பு உள்ளதா எனவும், போதிய மருத்துவர்கள் உள்ளனரா எனவும், மருத்துவ தேவைகள், சிகிச்சைகள் குறித்தும் கேட்டறிந்தார்.
மேலும் ஆரம்ப சுகாதார நிலையத்திற்குத் தேவையான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தும் கரோனா காலத்தில் கிராமப் பகுதியில் உள்ள மக்களுக்கு முழுமையாக மருத்துவ சேவை சென்றடைய வேண்டும் எனவும், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும் என மருத்துவர்களிடம் கேட்டுக் கொண்டார்.
இந்த ஆய்வின்போது திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, மக்களவை உறுப்பினர் அண்ணாதுரை, கலசபாக்கம் சட்டப்பேரவை உறுப்பினர் சரவணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.